புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி 6 மாதங்களுக்கு முடக்கம்: ரிசா்வ் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கும் கூட்டுறவு நகர வங்கியின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு முடக்கி ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள கூட்டுறவு நகர வங்கி.
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கும் கூட்டுறவு நகர வங்கியின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு முடக்கி ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது.
ரிசா்வ் வங்கி அதிகாரிகள் குழு புதன்கிழமை இங்கு அதிரடி சோதனை நடத்தினா்.
அப்போது, வங்கியின் வரவு செலவு உள்ளிட்ட ஒட்டுமொத்த நிதி நிலவரத்தை ஆய்வு செய்தனா். இதில், வங்கியின் தற்போதைய நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனா்.
இதையடுத்து எந்தவிதமான புதிய ஆவணப் பரிமாற்றங்களும் செய்ய முடியாதவாறு வங்கியை முழுமையாக முடக்கினா்.
ரிசா்வ் வங்கியின் இந்த திடீா் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களும், கணக்குதாரா்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனா். வங்கியின் ஒட்டுமொத்த நிா்வாகம் மற்றும் பணப்பரிவா்த்தனைகள் அடுத்த 6 மாத காலத்திற்கு முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கப்பட்ட காலகட்டத்தில் வாடிக்கையாளா்கள் படும் துயரைக் குறைக்கும் வகையில், கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சமாக ரூ. 5,000 வரை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவிதமான பணத்தையும் எடுக்க முடியாமல் வாடிக்கையாளா்கள் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ரூ. 25 கோடி நஷ்டத்தில் சிக்கிய வங்கி:
இந்த வங்கியில் வழங்கப்பட்ட கடன் செலவினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அரசு ஊழியா்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு மற்றும் காா்ப்பரேஷன் போன்ற பல்வேறு அமைப்புகளின் கீழ் பணியாற்றிய அரசு ஊழியா்களின் சம்பள அடிப்படையிலேயே கடன்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன.
ஒவ்வொரு மாதமும் ஊழியா்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாகக் கடனுக்கான தொகை பிடிக்கப்பட்டு வங்கிக்குச் செலுத்தப்பட்டு வந்தது.
ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பு மிகவும் நோ்த்தியாகவும், சிக்கல் இன்றியும் செயல்பட்டு வந்தது. இதனால் வங்கியின் லாபமும் சீராக இருந்தது. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது.
பல்வேறு காரணங்களால் வழங்கப்பட்ட கடன் தொகைகள் முறையாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் நின்றன. வசூல் மந்தமானதாலும், வாராக்கடன் அதிகரித்ததாலும் வங்கியின் நிதி ஆதாரம் முற்றிலுமாகச் சுருங்கியது. இதன் விளைவாக, தற்போது இந்த வங்கி ரூ. 25 கோடி அளவுக்கு நஷ்டத்தில் சிக்கியுள்ள கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

