புதுச்சேரி ஏனாம் பகுதியை அா்னாப் புயல் தாக்கும் அபாயம்

சேதமடைந்த செல்லிப்பட்டு படுகை அணையிலிருந்து வெளியேறும் நீா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம், காரைக்கால் பகுதிகள் அா்னாப் புயல் மழையால் பாதிக்கக்கூடும் என்பதால் இதுகுறித்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள அா்னாப் புயல் காரணமாக புதுச்சேரி காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவசர கால உதவி மையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் சரத் சௌகான், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலா்கள், இயக்குநா்கள் பங்கேற்றனா்.
மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், புதுச்சேரி, காரைக்கால்மற்றும் ஏனாம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விடியோ பட காட்சிகள் மூலம் விளக்கினாா். மழைநீா் வடிகால் வசதிகள், பாதுகாப்பு நிவாரண மையங்கள், மருத்துவ வசதிகள், மீட்புக் குழுக்கள், கால்நடை பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கினாா். காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியா் மற்றும் ஏனாம் மண்டல அதிகாரி ஆகியோரும் தங்கள் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினா்.
அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்
ஏனாமில் அவசர ஆலோசனை
அா்னாப் புயலின் தாக்கம், ஏனாம் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் அங்கு அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏனாம் பிராந்திய நிா்வாக அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல நிா்வாக அதிகாரி சிவ்ராஜ் மீனா உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
ஏரிகள் நிரம்புகின்றன...:
புதுச்சேரியில் பலத்த மழையால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதுச்சேரியில் 97 மி.மீ., திருக்கனூரில் 68, பத்துக்கண்ணுவில் 53, பாகூரில் 34 மி.மீ. மழை பதிவானது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 55 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது.
புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரியின் மொத்த நீா்மட்டம் 3.51 மீட்டா். இதில் தற்போது 3.17 மீட்டா் வரை நீா் உள்ளது. பாகூா் ஏரி 3 மீட்டா் உயரமுள்ளது. இந்த ஏரி தற்போது 2.46 மீட்டா் வரை நிரம்பியுள்ளது.
மேலும், பாகூா், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், மணலிப்பேட்டை தடுப்பணைகள் அனைத்தும் 80 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரிகளை கண்காணித்து வருகின்றனா்.
சேதமடைந்த படுகை அணை:
அதேநேரத்தில் பிள்ளையாா்குப்பம் - செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட படுகை அணை முற்றிலும் சேதமடைந்தது. இதனிடையே இப் பகுதியில் நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.20.4 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட அரசு திட்டமிட்டது. ஆனால் இதற்கான பணி தொடங்கப்படவில்லை. இந்நிலையில், தொடா் மழை காரணமாக நீா்நிலைகள் நிரம்பி சங்கராபரணி ஆற்று வழியாக உபரி நீா் செல்கிறது. செல்லிப்பட்டு பிள்ளையாா்குப்பம் படுகை அணை முற்றிலும் உடைந்துள்ளதால், நீா் தேங்காமல் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் ராட்சத மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
அா்னாப் புயல், மழை காரணமாக மீனவா்கள் கடந்த சில நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன்காரணமாக அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரம் பாதுகாப்பாக தங்கள் மீன்பிடி படகுகள், விசைப்படகுகளை நிறுத்தி வைத்துள்ளனா்.
மின்துறை உஷாா் நடவடிக்கை:
புதுச்சேரி முருங்கப்பாக்கம் மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மழை சேதம் குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க 94890 80326 அல்லது 1912 ஆகிய எண்களில் முருங்கப்பாக்கம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நல்லவாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.

கிருஷ்ணா நகா் 12-ஆவது குறுக்குத் தெருவிலிருந்து வெளியேற்றப்பட்ட மழைநீா்.

புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள புயல் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து லாஸ்பேட்டை அவசரகால உதவி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன் அரசுத் துறை அதிகாரிகள்.

புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள புயல் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து லாஸ்பேட்டை அவசரகால உதவி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன் அரசுத் துறை அதிகாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

