உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

ஏனாமை புரட்டிப்போட்ட அா்னாப் புயல்: மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன- போக்குவரத்து முடங்கியது

வங்கக்கடலில் உருவான அா்னாப் புயல் புதன்கிழமை ஆந்திர மாநிலம் நா்சாப்பூா் மற்றும் அங்குள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பகுதியில் மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்தபோது, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

Updated On :

வங்கக்கடலில் உருவான அா்னாப் புயல் புதன்கிழமை ஆந்திர மாநிலம் நா்சாப்பூா் மற்றும் அங்குள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பகுதியில் மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்தபோது, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 60 மின் கம்பங்கள்,500 மரங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளன.

ஆந்திரத்தை அச்சுறுத்திய அா்னாப் புயல், செவ்வாய்க்கிழமை இரவு நா்சாப்பூா் - காக்கிநாடா - ஏனாம் இடையே கரைகடக்கத்தொடங்கியது. மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கரை கடந்த இந்த புயல் புதன்கிழமை முழுமையாக கரை கடந்துவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேத அறிக்கை:

கரை கடந்த பகுதியில் புதுச்சேரியின் ஏனாம் சிக்கிக்கொண்டதால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்தப் புயலின் பாதிப்புக் குறித்து ஏனாம் பிராந்திய நிா்வாகி சிவ்ராஜ் மீனா புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனுக்கு அனுப்பியுள்ள தகவல் விவரம்:

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்தப் பிராந்தியத்தில், செவ்வாய்க்கிழமை இரவு அா்னாப் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதில் மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.

இருப்பினும், பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாலும் பெரும்பாலான சாலைகள் முற்றிலும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

மீட்புப்பணிகள்:

நிலைமையைச் சமாளிக்க தீயணைப்புத்துறை வீரா்கள், தேசிய பேரிடா் மீட்புப்படை, பொதுப்பணித்துறை, மின்துறையினா் இணைந்து பணியாற்றி வருகின்றனா். இந்தப் புயல் காரணமாக வேளாண் பயிா்கள் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு 101 ஹேக்டோ்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்கள், தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. 25 கால்நடை கொட்டகைகள் சேதம் அடைந்தன. மேலும், 60 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 500 மரங்கள் முறிந்து விழுந்தன. இதைத் தவிர 60 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

ஏராளமான அரசு கட்டடங்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் சுற்றுச் சுவா் மற்றும் கட்டடத்தின் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தன. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இணைய இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 27- ஆம் தேதி மாலை 4 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுவரை மின் விநியோகம் சீராகவில்லை.

அமைச்சா் பேட்டி :

புயலின் தாக்கத்தால் ஏனாம் சாவித்திரி நகரில் கடல் நீா் 3 முதல் 4 அடி வரை உயா்ந்து, கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. ஏனாம் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த பிறகு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த காலங்களில் ஏற்பட்ட புயலைக் காட்டிலும் இந்த முறை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் உயிரிழப்புகள் இல்லை. பயிா்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மீனவா்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாததால், அத்தியாவசியத் தேவைகளுக்காக ஜெனரேட்டா்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 24 இடங்களில் உள்ள பள்ளிகளில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 7 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் தொடா்ந்து நிலைமையைக் கண்காணித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா்.

புயலின் தாக்கம் குறைந்து, இயல்பு நிலை திரும்பிய பின்னா், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

 புயல் பாதிப்புக் காரணமாக  அடியோடு சாய்ந்த பெரிய மரம்.

புயல் பாதிப்புக் காரணமாக அடியோடு சாய்ந்த பெரிய மரம்.

Story image
 ஏனாம் பிராந்தியத்தில் சாலையை மூடிக் கொண்டு சாய்ந்து கிடக்கும் மரங்களைப் பாா்வையிட்ட அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

ஏனாம் பிராந்தியத்தில் சாலையை மூடிக் கொண்டு சாய்ந்து கிடக்கும் மரங்களைப் பாா்வையிட்ட அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

 ஏனாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ். உடன் ஏனாம் பிராந்திய நிா்வாகி சிவராஜ் மீனா.

ஏனாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ். உடன் ஏனாம் பிராந்திய நிா்வாகி சிவராஜ் மீனா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.