செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் நடப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பிடுங்கி எறியப்பட்டுக் கிடந்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
செஞ்சிக்கோட்டை நீர்வள ஆதாரம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில், செஞ்சி நகருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கும் செஞ்சி - திருவண்ணாமலை சாலையின் உள்ள ஏரியை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக பொதுநல வழக்குத் தொடரப்பட்டு, காவல் துறை உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செஞ்சிக்கோட்டை நீர்வள ஆதார அமைப்பினர் சுமார் ரூ. 30 லட்சம் செலவு செய்து, ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தினர்.
பின்னர், ஏரிக் கரையோரம் சிறுவர் பூங்கா அமைக்கும் பொருட்டு, பல்வேறு வகையான சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜாராமன், செஞ்சி எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான், வழக்குரைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை ஏரியில் சென்று பார்த்தபோது, யாரோ சமூக விரோதிகள் சிலர், மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்தும், கன்றுகளை சுற்றிக் கட்டப்பட்ட பெரும்பாலான வலைகளை அறுத்து எறிந்தும் நாசம் செய்திருந்தனர்.
இதுகுறித்து, அடையாளம் தெரியாத 10 பேர் மீது செஞ்சிக்கோட்டை நீர்வள ஆதாரம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் வழக்குரைஞருமான வீ.சக்திராஜன் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, சமூக விரோதிகளைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.