
விழுப்புரம் அருகே சுரங்கப் பாதையில் மழை நீர்: ரயிலை மறித்து கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால், திருப்பதி பயணிகள் ரயிலை மறித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால், திருப்பதி பயணிகள் ரயிலை மறித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்-காட்பாடி அகல ரயில் பாதையில் விழுப்புரம் அருகேயுள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த ஆளில்லாத கடவுப்பாதை கடந்தாண்டு மூடப்பட்டது. அங்கு தற்போது சுரங்கப் பாதைக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், ரயில் பாதையை கடந்து செல்ல வழியில்லாமல், கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை வழியாகவே கடந்த சில மாதங்களாக கோனூர், கொத்தமங்கலம் கிராம மக்கள் கடந்து, எதிர்பகுதியில் உள்ள கப்பூர், வெண்மணியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்வதும், அங்குள்ள மக்கள் கோனூர், காணை பகுதிகளுக்கு வருவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
அண்மையில் பெய்த மழையால் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுரங்கப் பாதை பால கட்டுமானத்துக்காக பாதைகளும் தோண்டப்பட்டுள்ளதால், தண்ணீர் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளது. இதனால், சுரங்கப் பாதையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
இதனால், போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வந்த கோனூர், கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர் கிராம மக்கள், சுரங்கப் பாதை பணிகள் முடியும் வரை மாற்று வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், விரக்தியடைந்த அந்தப் பகுதி மக்கள், புதன்கிழமை காலை கொத்தமங்கலம் பகுதியில் விழுப்புரம்-காட்பாடி அகல ரயில் பாதையில் திரண்டு, காலை 8.30 மணிக்கு அந்த வழியாக வந்த திருப்பதி (காட்பாடி-விழுப்புரம்) பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விழுப்புரம் ரயில் நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். காணை போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கொத்தமங்கலம் கடவுப்பாதையை அகற்றி சுரங்கப் பாதை அமைக்கின்றனர். இதன் அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள கப்பூர் ஆளில்லாத கடவுப் பாதையையும் மூடிவிட்டனர். இதனால், கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள், எதிர்புறமுள்ள கப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கும், விவசாய விளைபொருளை ஏற்றி வருவதற்கும், கோனூர், காணையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் வழியின்றி உள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் வழியின்றி தவிக்கின்றனர்.
சுரங்கப் பாதை பணிமுடியும் வரை அருகே உள்ள கப்பூர் ஆளில்லாத கடவுப்பாதையை திறந்து விட வேண்டும். மாற்று வழியை ஏற்படுத்தி கிராம மக்களின் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர் அவர்கள்.
ரயில்வே நிர்வாகத்துடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் ரயில் மறியலை கைவிட்டனர். இதனால், காட்பாடி-விழுப்புரம் பயணிகள் ரயில் அரை மணி நேரம் தாமதமாக விழுப்புரம் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






