மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயக் கடன் ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாததற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் பி.கலிவரதன் வரவேற்றார். மாநில தலைவர் ஆர்.விருத்தகிரி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் 2013-14-ஆம் ஆண்டு முதல் 2016-17-ஆம் ஆண்டு வரை உள்ள 4 ஆண்டுகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த, கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை (எஸ்ஏபி) பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டிக்கிறோம்.
நிகழ் ஆண்டு 2017-18-க்கான கரும்புப் பருவம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், நிகழ் பருவத்தின் கரும்பு அரைவை முடியும் தருவாயிலும்,
கரும்புக்கான விலையை தமிழக அரசு அறிவிக்காமல் உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வேளாண் கடன்களை ரத்து செய்வதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் செய்யாதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் வேளாண் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பல மாவட்டங்களில் முழுமையான இழப்பீட்டை பெற்றுத் தராமல், காலம் தாழ்த்தி வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம்.
இந்தக் கோரிக்கைகளுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, சென்னையில் அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்டச் செயலர் மதிவாணன், பொருளாளர் லட்சுமி நாராயணன், நிர்வாகிகள் சிவ.பாண்டியன், ராஜகோபால், மண்ணாங்கட்டி உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.