புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் நூதன முறையில் மறைத்து வைத்து கடத்த்திச் சென்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுப் புட்டிகள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அனைத்துச் சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. இந்த நிலையில், விழுப்புரம் மதுவிலக்கு உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் பனையபுரம் அடுத்த வாக்கூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். ஆனால், முதலில் அந்த வாகனத்தில் எந்த மதுப் புட்டிகளும் தெரியவில்லை.
பின்னர், சந்தேகத்தின்பேரில், சரக்கு வாகனத்தின் பின் பகுதியில் நன்கு சோதனையிட்டபோது, பிரத்யேக அறை அமைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த அறையில் 5,592 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வாகன ஓட்டுநரைப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள திடங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரேம்நாத் (35) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுப் புட்டிகளை வாங்கி, அதை காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக பிரேம்நாத் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.