விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரோவில் சர்வதேச நகரம் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
அரவிந்தரின் சீடரான அன்னை மீரா அல்போன்சாவின் பிறந்த தினமும் இந்த மாதத்தில்தான் வருகிறது. இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
ஆரோவில் பகுதியில் 11-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர், சிறுவர்கள், மாணவர்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆரோவில் மாத்திரி மந்திர் பார்வையாளர்கள் மையத்திலிருந்து தொடங்கிய இந்த ஓட்டம் இடையன்சாவடி, குயிலாப்பாளையம், கோட்டக்குப்பம் வழியாக மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. 42 கி.மீ.,21 கி.மீ., 10, 5 கி.மீ. என நான்கு பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் டிஎஸ்பி இளங்கோவன், ஆரோவில் காவல் ஆய்வாளர் பிரதீப்குமார் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாரத்தான் ஓட்டத்தையொட்டி, ஆரோவில் நகரின் பார்வையாளர்கள் மையப் பகுதியில் இசை நிகழ்ச்சி, கண்காட்சி நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.