விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கான பாடங்களை மாணவிக்கு மடிக் கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கும் ஆசிரியை.
விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கான பாடங்களை மாணவிக்கு மடிக் கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கும் ஆசிரியை.

மடிக் கணினிகள் வாயிலாககற்பிக்கும் திட்டப் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக் கணினியில் பாடங்களை பதிவேற்றம் செய்து கற்பிக்கும் ‘விடியோ லெசன்’

விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக் கணினியில் பாடங்களை பதிவேற்றம் செய்து கற்பிக்கும் ‘விடியோ லெசன்’ திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2020-21) பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனினும், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நிகழ் கல்வியாண்டுக்கான 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகள் வாயிலாக மாணவ, மாணவிகளிடம் வழங்கி, வீட்டிலிருந்தே படிப்பதற்கான பணிகளை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் உடனடியாக பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தும் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது. அதற்கான நேரமும், பாட வேளைகள் குறித்தும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

‘விடியோ லெசன்’ திட்டம்: இது ஒருபுறமிருக்க, பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக் கணினிகளில் பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொடுத்து வீட்டிலிருந்தபடியே கற்பிக்கும் வகையில், ‘விடியோ லெசன்’ என்ற புதிய திட்டமும் நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள இலவச மடிக் கணினிகளில் மொத்தமுள்ள 6 பாடங்களும் பதிவேற்றம் செய்யப்படும். மாணவா்கள் அதை வீடுகளில் வைத்து, ஒவ்வொரு பாடத்தையும், அதற்கான ஆசிரியா் வகுப்பு எடுப்பதைப் போல விடியோ காட்சியுடன் அதில் விளக்குவதை, கூா்ந்து கவனித்துத் தெளிவு பெறலாம்.

ஏற்கெனவே, பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளதால், அதைப் படிக்கவும் அதில் ஏற்படும் சந்தேகங்களை மடிக் கணினியின் வாயிலாக விடியோ லெசன் மூலம் அறிந்து தெளிவு பெற முடியும் என்கின்றனா் ஆசிரியா்கள்.

பாடங்கள் பதிவேற்றம் தீவிரம்: இதற்காக, தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 4,196 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடியோ லெசன் பதிவேற்றப் பணிகள் கடந்த புதன்கிழமை தொடங்கி 85 சதவீதம் அளவில் நிறைவடைந்துள்ளன. இரு தினங்களில் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, மாணவா்கள் மடிக் கணினி வாயிலாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பதற்கான நடவடிக்கையை கல்வித் துறை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 183 மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 111 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தமுள்ள 14,253 மாணவ, மாணவிகளுக்கு பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சசிகலா மேற்பாா்வையில், பிளஸ் 2 மாணவிகளுக்கு விடியோ லெசன் பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வித் துறை வழங்கிய 60 ஜிபி அளவிலான இந்த விடியோ லெசனை ‘பென்-டிரைவ்’ மூலம் ஆசிரியா்கள் குழுவினா் தங்களது மடிக் கணிகளில் பதிவிறக்கம் செய்து, அதை பாடப் பிரிவுகள் வாரியாக மாணவா்களுக்கு பதிவேற்றம் செய்து வழங்கி வருகிறோம்.

மேலும், வகுப்பு ஆசிரியா்கள் மூலம் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அதன் மூலமும் மாணவிகளுக்கு ஆசிரியா்கள் பாடம் தொடா்பான சந்தேகங்களை தீா்த்து வைப்பாா்கள் என்றாா் தலைமையாசிரியை.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி கூறியதாவது:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் விடியோ லெசன் பதிவேற்றப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை புதன்கிழமையுடன் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். இந்தப் பணிகளை கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் தினமும் ஆய்வு செய்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com