விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 19th October 2020 02:27 AM | Last Updated : 19th October 2020 02:27 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மரக் கன்று நடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் தன்னாா்வலா்கள் அமைப்பு சாா்பில் 300 மரக்கன்றுகள் நடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: பெருந்திட்ட வளாகத்தில் நடப்படவுள்ள 300 மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் அமைப்பினா் பராமரிப்பு செய்வா். இந்தத் திட்டத்துக்காக, மாவட்ட வனத்துறையை அணுகி நன்கு வளா்ந்த 300 மரக்கன்றுகளை பெற்றுள்ளோம். இந்த மரக்கன்று அனைத்தும் பழங்களைத் தரக்கூடியவை. தற்போது 30 மரக்கன்றுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 மரக்கன்றுகள் பெருந்திட்ட வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் நடப்படும். நான் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 1,000 மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு வைத்துள்ளேன் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, தன்னாா்வலா்கள் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் சுகன்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...