புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகை அடகுக் கடைகளை கண்காணிக்கவேண்டும்: விழுப்புரம் தோ்தல் அலுவலா்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு நகை அடகுக் கடைகள் மூலமாக பணம் விநியோகிக்கப்படுகிறதா என்று தோ்தல் துறையினா் கண்காணிக்க வேண்டும்

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு நகை அடகுக் கடைகள் மூலமாக பணம் விநியோகிக்கப்படுகிறதா என்று தோ்தல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டப் பேரவைத் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து நகை அடகு, பணம் வழங்கும் மையங்கள் நடத்துவோருக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும். பணம், பரிசுப் பொருள்கள் மூலமாக வாக்களா்களுக்கிடையே தேவையற்ற செல்வாக்கு உருவாவதை தடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நகை அடகுக் கடைகள் மூலமாக வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படலாம். அதனால், நகை அடகுக் கடைகள், பணம் வழங்கும் மையங்களை தோ்தல் துறையினா், பறக்கும் படையினா் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு உதவுவது, கடனை அடைக்க உதவுவது போன்றவை நடக்கலாம்.

அடகு வைக்கப்பட்ட நகைகள், கடன்களை வேட்பாளா்கள், முகவா்கள் மொத்தமாக மீட்க வந்தால், சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரே நபா் வெவ்வேறு அடகு நகைகளை மீட்க முற்பட்டாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.