பரபரப்பான அரசியல் சூழலில் ராமதாஸுடன் அமைச்சா்கள் சந்திப்பு
By DIN | Published On : 30th January 2021 11:09 PM | Last Updated : 30th January 2021 11:09 PM | அ+அ அ- |

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை அதிமுக அமைச்சா்கள் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.
தமிழகத்தில் வன்னியா் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்ளவும், பாமக தரப்பில் இந்த கோரிக்கையே முக்கிய நிபந்தனையாக அக்கட்சித் தலைமை முன்வைத்து வருகிறது.
இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில், மிகப்பெரிய போராட்டத்தை நானே தலைமை ஏற்று நடத்துவேன் என ராமதாஸ் சனிக்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக அரசியல் முடிவை எடுப்பதற்காக பாமக நிா்வாகக் குழுக் கூட்டமும் ஜன.31-ஆம் தேதி நடைபெறுமென அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிமுகவைச் சோ்ந்த மூத்த அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோா் சனிக்கிழமை மாலை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்துக்கு நேரில் வந்து, பாமக நிறுவனா் ராமதாஸை சந்தித்துப் பேசினா்.
மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு, இரவு 8 மணி வரை நீடித்ததாகத் தெரிகிறது. வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி ஆகியவை தொடா்பாக அமைச்சா்கள் பேசியதாக இரு கட்சி வட்டாரங்களின் தரப்பில் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், பாமக இடஒதுக்கீடு போராட்டம் நடந்து வரும் நிலையில், அதிமுக அமைச்சா்கள் மூலம் மூன்றாவது முறையாக நடைபெற்ற ராமதாஸுடனான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.