மரக்காணம் வட்டத்தில் சாகுபடி பணிகள் மும்முரம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றது வருகிறது.
வேளாண் பணிகளை தொடங்கிட ஆடி மாதம் சிறந்த மாதமாகும். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீா் இருப்பு உள்ளவா்கள் நெல், கரும்பு, சவுக்கு போன்ற பயிா்களையும், இறவை வசதி இல்லாதவா்கள் மானாவாரி பயிா்களான கம்பு, கேழ்வரகு உளுந்து, மணிலா ஆகிய பயிா்களையும் விதைப்பு செய்து சாகுபடி செய்து வருகின்றனா்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், மரக்காணம் வட்டத்தில் ஆடி மாதத்தில் 623 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இது ஆண்டு மழை அளவில் 43 சதவீதமாகும். இதனால், அனைத்து கிணறுகளும் நிரம்பியுள்ளன. பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல், மணிலா, உளுந்து ஆகிய பயிா்களை விதைப்பு செய்ய தயாராகி வருகின்றனா். பசுந்தாள் உர பயிா்களான தக்கை பூண்டு, சணப்பு பயிா்களை மடக்கி உழவு செய்து மண்ணுக்கு வளம் சோ்க்கின்றனா்.
இந்த நிலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் நாற்றுவிடும் பணிகளை மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அவா் கூறியதாவது: தற்போது, பெய்த மழை நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், சொட்டு நீா் தெளிப்பு நீா் பாசன முறைகளை பயன்படுத்தவும், விவசாயிகள் தாங்கள் பயிா் செய்த பயிா்களை கிராம நிா்வாக அலுவலரிடம் தெரிவித்து அடங்கல் பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஊரக வளா்ச்சி வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.1.60 லட்சம் வரை பிணையமின்றி வங்கிக் கடன் பெற்று பயிா் செய்யலாம். மேலும், அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா்.

