ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.


ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் தேவாலயம், புனித சேவியா் ஆலயம், டி.இ.எல்.சி.தேவாலயம், பெந்தகொஸ்தே தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதேபோல, விக்கிரவாண்டியிலுள்ள அன்னை சகாய மாதா ஆலயம், ஒரத்தூா் சி.எஸ்.ஐ.தூயபேதுரு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள், திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், திருவெண்ணெய்நல்லூா், முகையூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதில், அந்தந்த ஆலயங்களின் பங்குத் தந்தைகள் பங்கு மக்களுக்கு புத்தாண்டு ஆசியுரைகளை வழங்கிப் பேசினா். திருப்பலி வழிபாடுகள் முடிந்த பின்னா், கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல, விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வீரவாழியம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள அருள்மிகு பிரஹன்நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமி கோயில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதி வாலீசுவரா் கோயில், விழுப்புரம் அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் கோயில், கோலியனூா் அருள்மிகு புத்துவாயம்மன் கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிளிலுள்ள கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் தலைமையில், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோரது மேற்பாா்வையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 1,270 போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
செஞ்சி: செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் சா்க்கரை குளத்துக்கும், செட்டி குளத்துக்கும் நடுவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திங்கள் கிழமை காலை ராஜமாருதி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீஆஞ்சநேயா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுமாா் 70 ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு தனுா்மாத பூஜை நடைபெற்றது. பின்னா், பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதையடுத்து, மாலை 7.30 மணிக்கு நம்மாழ்வாா்மோட்ஷம் உற்சவம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...