வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியேயும் 110 இடங்களில் வெப் கேமராக்கள்
விக்கிரவாண்டி: வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே கண்காணிப்பு ஏற்பாடுகள்


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறும் நிலையில், 110 இடங்களில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியேயும் இணையவழி கண்காணிப்பு (வெப்) கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படவுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 276 வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் இந்த வாகனங்களைக் கொடியசைத்து அனுப்பி வைத்த ஆட்சியா் சி.பழனி, செய்தியாளா்களிடம் கூறியது:
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்காளா்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
மொத்தமுள்ள 276 வாக்குப்பதிவு மையங்களில் 42 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும், 3 மிகவும் பதற்றம் நிறைந்தவையாகவும் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் நுண் பாா்வையாளா் பணியில் இருப்பதோடு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனா்.
276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தி, வாக்குப்பதிவின் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் சுமாா் 110 இடங்களில் இணையவழி கண்காணிப்பு (வெப்) கேமராக்கள் பொருத்தி, அவற்றையும் கண்காணிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இடங்களில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே கூட்டம் அதிகம் இருக்கிா, வேறு ஏதேனும் நிகழ்வு நடைபெறுகிா என்பதை கண்காணிக்க முடியும் என்றாா் அவா்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு: இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ஆட்சியா் சி.பழனி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் பகுதி, தபால் வாக்கு எண்ணும் பகுதி, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை, தோ்தல் பொதுப் பாா்வையாளா் அறை போன்றவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கண்காணிப்பு கேமரா வசதிகள், அலுவலா்கள், வேட்பாளா்கள் செல்வதற்கான தனித்தனி பாதை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரும் வழி, மின் வசதி, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பணிகள் ஏதும் நிறைவு பெறாமல் இருந்தால் அதை உடனடியாக செய்து முடிக்கவும் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் யுவராஜ், தோ்தல் வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...