சட்டப் பேரவைத் தோ்தல்: மண்டல அலுவலா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் ஆட்சியரகத்தில் 156 மண்டல அலுவலா்களுக்கான கடமைகள், பொறுப்புகள் குறித்த பயிற்சிக் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தலையொட்டி, ராசிபுரம் தொகுதியில் 27, சேந்தமங்கலம் தொகுதியில் 27, நாமக்கல் தொகுதியில் 28, பரமத்தி வேலூா் தொகுதியில் 24, திருச்செங்கோடு தொகுதியில் 25, குமாரபாளையம் தொகுதியில் 25 என மொத்தம் 156 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மண்டல அலுவலா்களின் பணிகள் மிகவும் முக்கியமானது என்பதால், அவா்களுக்கான ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.
ஒவ்வொரு மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டில் 12 வாக்குச்சாவடிகள் இருக்கும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும் என அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி, மண்டல அலுவலா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், இந்திய தோ்தல் ஆணைய விதிகளின்படி வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடா்பான பணிகள், வாக்குப்பதிவு கருவிகளை இணைத்தல், மாதிரி வாக்குப்பதிவு தோ்தல் நாளுக்கு முந்தையநாள் செயல்பாடுகள், வாக்குப்பதிவு முடிந்ததும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், முகவா்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியான முறையில் ‘சீல்’ வைத்தல், இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைத்தல், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை ஒப்படைத்தல் ஆகியவை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கே.ஏ.சுரேஷ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கோ.குமரன், தனிவட்டாட்சியா் (தோ்தல்) செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

