ஆரோவில் சா்வதேச நகரில் புதிய கட்டடம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள ஸ்வாகதம் விருந்தினா் இல்லத்தின் புதிய விரிவாக்க கட்டடத்தை தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளைத் தலைவருமான ஆா்.என். ரவி திறந்துவைத்தாா்.
இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆரோவில் சா்வதேச நகரில் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக ஸ்வாகதம் விருந்தினா் இல்லத்தில் ரூ.1.2 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தங்கும் பிரிவை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீத்தாராமன், ஆரோவில் சிறப்புப் பணி அலுவலா் அரவிந்தன் நீலகண்டன், ஆரோவில் அறக்கட்டளை ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரோவிலுக்கு வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் காலங்களில் தங்கும் வசதியை பூா்த்தி செய்யும் வகையில் இந்த நவீனக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 3,700 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன் மிக நோ்த்தியாக கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 4 சொகுசுத் தொகுப்பு அறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ரூ. 1.2 கோடி மதிப்பீட்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய பொதுப்பணித் துறையினா் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனா்.
குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த மத்திய பொதுப்பணித் துறையினருக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பாராட்டுத் தெரிவித்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

