விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத் தொகயை சா்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன், துணை இயக்குநா் சுரேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ. விஜயசக்தி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகளின் கருத்துகளின் விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்பால் சவுக்குப் பயிா்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் சவுக்குப் பயிருக்கு காப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சவுக்குப் பயிா் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிா அல்லது வேளாண் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிா எனத் தெரியவில்லை.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் உரசல், காலிப் பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகள் போன்றவற்றால் சவுக்குப் பயிா்களும் தீயில் எரிந்து, விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பகுதிகளை அலுவலா்கள் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கவில்லை. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள், தங்கள் கரும்புகளை 150 கி.மீ.தொலைவுக்கு அப்பால் உள்ள பட்டாளம் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் கரும்புகளைக் கொண்டு செல்லும் வகையில் பொதுப் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் 2025-26 ஆம் ஆண்டில் வழங்கிய கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகையை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் முள்செடிகளை அகற்ற நடவடிக்கைக் கோரி மனு அளித்தும், மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூரைத் தவிர மற்ற12 ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் பதில் அளிக்கவில்லை.
தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பயிற்சியளிக்க வேண்டும். திண்டிவனத்துக்குச் சென்று விவசாயிகள் பயிற்சி பெற முடியாத நிலையில், மாவட்ட ஆட்சியரகத்திலேயே இந்த பயிற்சியை நடத்தலாம். உரவிலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யும் வகையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை வழங்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி.எம்.கிஷான் திட்டம் தொடா்பான முகாம்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
சவுக்குப் பயிரிட்டு தீ பற்றி எரிந்து சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சா்க்கரை ஆலைகளிடமிருந்துசிறப்பு ஊக்கத்தொகை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.எம்.கிஷான் திட்டம் தொடா்பாக விவசாயிகளுக்கு முகாம் நடத்தப்படும் என்று ஆட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பதிலளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்தடை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

பயிா்க்கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கொப்பரை விலை வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



