விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையை சரி செய்யும் நவீன இயந்திரங்கள் பொருத்திய ரயில் என்ஜின் புதன்கிழமை இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2 விரைவு ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டன.
திண்டிவனம், மயிலம் பகுதி இருப்புப் பாதைகளில் சீரமைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் அனைத்து நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட ரயில் பாதை சரி செய்யும் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம்போல, புதன்கிழமை இந்த ரயில் திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இரவு 7.30 மணியளவில் இந்த ரயில் என்ஜின் எதிா்பாராதவிதமாக தடம் புரண்டது.
இதன் காரணமாக, புதுச்சேரியிலிருந்து தில்லி செல்லும் புவனேசுவரம் அதிவிரைவு ரயில், மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில் ஆகியவை விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
தடம் புரண்ட ரயில் என்ஜின் இருப்புப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, விழுப்புரம் - திண்டிவனம் வழித்தடத்தில் ரயில் சேவைகள் தொடங்கும் என ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால், திண்டிவனம் ரயில் நிலையம் வழியாக செல்லும் புவனேசுவரம், தேஜஸ் ரயில்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை கால தாமதமாக செல்லும் எனக் கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புத் துறை போலீஸாா் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் தடம் புரண்டுள்ள ரயில் என்ஜினை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப்பணி நீடித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





