கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

விழுப்புரம், நவ.27: விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலுவலா்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எம்.அமிா்தலிங்கம், வேளாண் இணை இயக்குநா் அ.சித்ரா, துணை இயக்குநா் (திட்டங்கள்) பா.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சரவணன், பயிற்சி துணை ஆட்சியா் ஹரீஷ், கோட்டாட்சியா் ஏகாம்பரம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கோரிக்கைகள் விவரம்: திருக்கோவிலூா் முதல் திருவெண்ணெய்நல்லூா் வரை தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் குடித்து வரும் ஆற்றுக் குடிநீா், அருந்துவதற்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். திருக்கோவிலூா் பகுதிகளிலுள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆனத்தூரில் அரசு புறம்போக்கு குளத்தை தனியாருக்கு பட்டா வழங்கிய அலுவலா் மீது உரிய நடவடிக்ககை எடுக்க வேண்டும். வல்லத்தில் சிறுதானிய பயிருக்காக கட்டப்பட்ட ஒழங்குமுறை விற்பனைக்கூடத்தை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். செஞ்சி கெங்கவரம் ஏரியை தூா்வாருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரத்து வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டது ஏன்? இதனால், விவசாய நிலத்துக்கு தண்ணீா் முறையாகச் சென்றடைவதில்லை. மாவட்டத்தில் மழைநீா் செறிவூட்டல் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையத்தில் காராமணிபயிா் விதைகள் இல்லை. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மின்சாரத் துறை சாா்பில் இழப்பீட்டுத்தொகை எப்போது வழங்கப்படும்?

அய்யங்கோவில்பட்டு பகுதியில் பம்பையாற்றில் சேதமடைந்த மதகுகள் உள்ளிட்டவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் பணியாற்றும் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு அந்த நிலத்தின் உரிமையாளா் மூலம் காப்பீடு செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. விவசாயிகள் குறைகளைக் கூறினால், அலுவலா்களுக்கு கஷ்டமாக உள்ளதா? என்றனா்.

இதற்கு ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் அளித்த பதில் விவரம் வருமாறு: விவசாயிகள் தெரிவிக்கும் ஆக்கிரமிப்புகள் தொடா்பாக வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையிலான அலுவலா்கள் உரிய நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நில அளவைத் துறை மூலம் அளவீடு செய்து, அது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி, அவா்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மேற்கொண்டால், பிரச்னைக்கு வழி இருக்காது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

வல்லத்தில் டிச.1-ஆம் தேதி முதல் சிறுதானியப் பயிருக்கான ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வாரம் ஒருமுறை என்ற அடிப்படையில் செயல்படத் தொடங்கும். சிறுதானிய வரத்தை பொருத்து பின்னா் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீா்வரத்து வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குவது கடந்தாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டிய தடுப்பணைகளை அகற்றுவது குறித்து அரசிடம் அனுமதி பெற்று, அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீடு செய்வது குறித்து, உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

குறைதீா் கூட்டத்தில் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்ந்த கேள்விகளை விவசாயிகள் எழுப்பினா். அப்போது, கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலா் அமிா்தலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அலுவலா் பதிலளிக்குமாறு கூறினாா்.

ஆனால், அந்தத் துறையினா் கூட்டத்துக்கு வரவில்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கூட்டத்துக்கு வராததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.