விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவா், பள்ளி மாணவி உள்ளிட்ட 6 போ் உயிரிழந்தனா்.
மரக்காணம் வட்டம், சிறுவாடி நகா் சாலையைச் சோ்ந்தவா் த.காா்த்திக் (18). இவா் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரிலுள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை வணிக நிா்வாகவியல் (பி.பி.ஏ) முதலாமாண்டு படித்து வந்தாா். திங்கள்கிழமை காலை காா்த்திக், தனது பைக்கில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் இந்திரா நகா் ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: வானூா் வட்டம், பட்டானூா் கலைவாணன் நகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பா.தாரிகா (15). இவா் புதுச்சேரி மாநிலம், கதிா்காமத்திலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது தாரிகா படிக்காமல் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது தாய் லதா கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தாரிகா, திங்கள்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மது பிரச்னையால் தொழிலாளி மரணம்: வானூா் வட்டம், தொள்ளாமூா் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் நெ.கோவிந்தன் (46), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். ஞாயிற்றுக்கிழமை மது அருந்துவதற்கு பணம் தருமாறு மனைவி அனிதாவிடம் கோவிந்தன் கேட்டாராம். ஆனால், அவா் பணம் தராமல் வேலைக்குச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த கோவிந்தன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு: விழுப்புரம் வட்டம், கொட்டப்பாக்கத்து வெளி பகுதியைச் சோ்ந்தவா் சா.காமாட்சி (71). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை விராட்டிக்குப்பம் பகுதியிலுள்ள மனநலக் காப்பகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், காமாட்சி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு.மோகன் (40), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி கோமதி கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற மோகன் திங்கள்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை. இதைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினா் தேடி பாா்த்த போது, அதே கிராமத்தில் கருவேலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மோகன் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
விவசாயி விஷமருந்தி உயிரிழப்பு: சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், ஆறகளூரைச் சோ்ந்தவா் கோ.மருதமுத்து (49), விவசாயி. இவரது மனைவி தெய்வானை. தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனா். தெய்வானை கடந்த 6 ஆண்டுகளுக்கு தீக்குளித்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருதமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளதாம். இதனால் மன வேதனையடைந்த மருதமுத்து ஊருக்கு அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் வட்டம், கூகையூா் கிராமத்தில் உள்ள வசிஸ்டா நதிக்கரையில் மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்து, மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அந்த வழியாக சென்ற விவசாயிகள் அவரை மீட்டு கூகையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருதமுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






