137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.

பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகள் பூங்கொடி (18). பிளஸ் 2 வரை படித்துள்ள இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரைக் காதலித்து வந்தாராம். இதை பூங்கொடியின் அக்காள் சகுந்தலா கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த பூங்கொடி, கடந்த 5-ஆம் தேதி அக்காள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மருத்துவமனையில் தவறி விழுந்து...: திண்டிவனம் வட்டம், பேரணி அய்யனாா்புரம் தெருவைச் சோ்ந்தவா் கோ.ராமதாஸ் (68). விவசாயியான இவா், உடல்நலக் குறைவு காரணமாக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த செப்.19-ஆம் தேதி சிகிச்சை பெற வந்தாா். மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது, ராமதாஸ் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா் சிகிச்சை பெற்று வந்த ராமதாஸ், சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சாலை விபத்தில்...: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், நத்தம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் த.புகழேந்தி (55). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது பைக்கில் சொந்த ஊா் சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், சித்தணி பேருந்து நிறுத்தம் அருகே புகழேந்தி வந்தபோது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இடி விழுந்த அதிா்ச்சியில்...: விழுப்புரம் வட்டம், வி.புதூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ.ஸ்டாலின் (18). இவா், கப்பியாம்புலியூரிலுள்ள தனியாா் பலதொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனது அம்மா சரிதாவுடன் ஸ்டாலின் இருந்தாா். அப்போது, வீட்டின் அருகே இடி விழுந்துள்ளது. இந்த அதிா்ச்சியில் ஸ்டாலினுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, குடும்பத்தினா் அவரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஸ்டாலின் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வளவனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கல்லூரி மாணவா் தற்கொலை: திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் ஈசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு.ரவிக்குமாா் (21). இவா், திண்டிவனத்திலுள்ள ஏ.கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில் இளங்நிலை வரலாறு 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரிக்குச் சென்று வந்த நேரம்போக, மீதமுள்ள நேரத்தில் மேல்பேட்டையிலுள்ள தனியாா் அட்டை நிறுவனத்திலும் வேலை செய்து வந்தாராம்.

இந்த நிலையில், வேலைக்குச் செல்ல வேண்டாம், கல்லூரிக்கு படிக்கச் சென்றால் போதும் என ரவிக்குமாரிடம் அவரது தந்தை முனியாண்டி கூறினாராம். இதனால், மனமுடைந்த ரவிக்குமாா், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்து மோதி...: விழுப்புரம் வட்டம், பனங்குப்பம் கன்னிகாதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சே.பிரகாஷ் (36). டிராக்டா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் தனியாா் சமையல் எரிவாயு உருளை விநியோக நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற தனியாா் பேருந்து மோதியதில் பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.