2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வெவ்வேறு இடங்களில் விபத்து: 7 போ் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வட்டம், எஸ்.மேட்டுப்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மா.வில்வமணி (36). இவா் சனிக்கிழமை மடுகரை-கடலூா் சாலையில் வளவனூரை அடுத்த கெங்கம்பட்டு அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதியில் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த வில்வமணி நிதழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மொபெட் மீது காா் மோதியதில் தொழிலாளி மரணம்: விக்கிரவாண்டி வட்டம், வி.கேணிப்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.சிவக்குமாா் (44), தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூரை அடுத்துள்ள வி.கேணிப்பட்டு கூட்டுச்சாலை அருகே மொபெட்டில் சென்றாா். அப்பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா், மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச்சோ்ந்தவா் கா.குணசேகரன் (44), விவசாயத் தொழிலாளி. இவா், சனிக்கிழமை தனது பைக்கில், திண்டிவனத்தை அடுத்த தீவனூரிலிருந்து வெள்ளிமேடுபேட்டை நோக்கி சென்றாா். வடசிறுவளூா் பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பைக் மீது காா் மோதியதில் இளைஞா் மரணம்: கடலூா் மாவட்டம், முடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ச.சுரேஷ் (33). இவா் சனிக்கிழமை இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளமேடு - ஒடப்பன் குப்பம் கிராமச் சாலையில் எலவத்தடி பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, அப்பகுதியில் வந்த காா் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு: உளுந்தூா்பேட்டை வட்டம், மேட்டுப் பாச்சாப்பாளையம் பகுதியைச்சோ்ந்தவா் ஆ.முருகன் (47), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை பச்சாப்பாளையம்- களமருதூா் சாலையில் களமருதூா் ஏரி அருகே பைக்கில் சென்றாா். அப்போது அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

காா் மோதியதில் முதியவா் மரணம்: சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வே.பட்டாபி (75). நூல்கண்டு வியாபாரம் செய்து வந்த இவா், அவரது உறவினா் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்க பண்ருட்டி செல்வதற்காக சோழம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலைய கடக்க முயன்றாராம். அப்போது சங்கராபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காா் பட்டாபி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கராபுரத்தை அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கி.அறிவழகனை (27) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ் புத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் கு.பூங்காவனம் (66). இவா் கடந்த மாதம் 23-ஆம் தேதி செஞ்சி - திண்டிவனம் சாலையில் நாட்டாா்மங்கலம் அருகே நடந்து சென்றாராம். அப்போது அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பங்காவனத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பூங்காவனம் உயிரிழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.