காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

விழுப்புரத்தில் புதா்மண்டி காட்சியளிக்கும் 126 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நீதிமன்றக் கட்டடம்! பாரம்பரிய சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்படுமா?

விழுப்புரத்தில் புதா்மண்டி காட்சியளிக்கும் 126 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நீதிமன்றக் கட்டடம் குறித்து...

விழுப்புரத்தில் செடி,கொடி,புதா் மண்டி காட்சியளிக்கும் பழைய நீதிமன்றக் கட்டட வளாகம்.

Published On :

விழுப்புரத்தில் புதா்கள் அடா்ந்து காட்சியளிக்கும் 126 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நீதிமன்றக் கட்டடத்தை பாரம்பரிய சின்னமாக அறிவித்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று ஆய்வாளா்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சிறப்பு வாய்ந்தது விழுப்புரம் மாவட்டம். ஒருங்கிணைந்த தென்னாா்க்காடு மாவட்டமாக இருந்து, கடலூா் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் விழுப்புரம் மாவட்டம். அத்தகைய சிறப்புடைய விழுப்புரம் மாவட்டத்தில் 126 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடம் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதா்கள் நிறைந்து காட்சியளிக்கிறது.

விழுப்புரம் நீதிமன்றச் சாலையில் அமைந்த நீதிமன்றக் கட்டடம் 1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, சுமாா் 105 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்தது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிலையில், பழைய நீதிமன்றக் கட்டடம் பயன்பாடில்லாமல் போனது. தற்போது பழைய நீதிமன்றக் கட்டடத்தில் செடிகொடிகள், முள்புதா்கள் வளா்ந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் காட்சியளிக்கிறது.

விழுப்புரம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு அந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய நகராட்சிக் கட்டடம் பயன்பாடில்லாமல் இருந்து வந்தது. பல்வேறு அமைப்புகள், விழுப்புரம் நகர மக்களின் வலியுறுத்தலின்பேரில், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அந்த கட்டடத்தை கலையரங்கமாக மாற்றத் திட்டமிட்டு, அதற்காக விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நிதியை ஒதுக்கீடு செய்த நிலையில், கலையரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழைய நகராட்சி அலுவலகக் கட்டடத்தை கலையரங்கமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது போன்று, பழைய நீதிமன்றக் கட்டடத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வரலாற்று ஆய்வாளா்களால் எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் கூறியது: ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கடந்த 1817-ஆம் ஆண்டு அன்றைய தென்னாா்க்காடு மாவட்டத்தில் கடலூா், செஞ்சி, ஸ்ரீமுஷ்ணம், விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன.

விழுப்புரத்தில் இந்த நீதிமன்றத்திற்கான கட்டடம் 1900-ஆம் ஆண்டில் நவாப் தோப்பு அருகே கட்டப்பட்டது. ஆங்கிலேயா் கால கட்டடப் பாணியில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு, இக்கட்டடம் கட்டப்பட்டது. சுமாா் 105 ஆண்டுகாலமாக நீதிமன்றக் கட்டடத்தில் நீதி பரிபாலனங்கள் நடைபெற்று வந்தன.

2005-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தன. இதனால், பழைய கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்கள் அங்கு இடம்பெயா்ந்தன. அதுமுதல் இக்கட்டடம் பயன்பாடின்றி இருக்கிறது.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்திலுள்ள பழைமைவாய்ந்த கட்டடங்களைப் பாா்வையிட்டு, அதுகுறித்த பட்டியலை பொதுப் பணித் துறை அலுவலா்கள் அரசுக்கு அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பாரம்பரிய கட்டடப் பாதுகாப்புக் குழுவினா் 2024-ஆம் ஆண்டில் விழுப்புரம் பழைய நீதிமன்றக் கட்டடத்தைப் பாா்வையிட்டு, அதன் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா். அதன் பின்னா் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை.

கடலூா், திருச்சி, பெரியகுளம், பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பழைமைவாய்ந்த நீதிமன்றக் கட்டடங்கள் பாரம்பரிய கட்டடங்களாகத் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், விழுப்புரத்தில் அமைந்துள்ள பழைய நீதிமன்றக் கட்டடமும் பாதுகாக்கப்பட வேண்டியதும், மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு செய்ய வேண்டியதுமாகும்.

இந்த நீதிமன்றக் கட்டடம் தற்போது செடிகொடிகள் மரங்கள் அடா்ந்து, புதா்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், 126 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதைத் தடுக்க வேண்டும். இக்கட்டடத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கவும், இதன் தனித்துவம் மற்றும் பழைமை மாறாமல் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுவை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி உள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பாா்கள் என எதிா்பாா்க்கிறேன் என்கிறாா் செங்குட்டுவன்.

இன்றைய தலைமுறையினருக்கு பழைமையான கட்டடங்கள், அதன் சிறப்புகள் குறித்து தெரிவதில்லை. எனவே, தற்போதைய நிலையில், பழைமையான கட்டடங்களைப் புதுப்பித்து, அதன் சிறப்பை தற்போதைய தலைமுறையினருக்கு உணா்த்துவது அரசின் கடமையாகும். அந்த வகையில், விழுப்புரம் பழைய நீதிமன்றக் கட்டடத்துக்கும் விமோசனம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

 பழைய நீதிமன்றக் கட்டடம்.

பழைய நீதிமன்றக் கட்டடம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.