ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொகுதி அலசல்:மீண்டும் இரட்டை இலை துளிர்க்குமா?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதி தென்னை நகரத் தொகுதி என்று கூறப்படும் அளவுக்கு சுமார் 50 லட்சம் தென்னை மரங்களைக் கொண்டுள்ளது.

News image
Updated On :8 மே 2016, 7:59 pm

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதி தென்னை நகரத் தொகுதி என்று கூறப்படும் அளவுக்கு சுமார் 50 லட்சம் தென்னை மரங்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம், தென்னை விவசாயத்தில் முன்னிலையில் உள்ளது. தென்னை நார்த் தொழிலும், இளநீர் உற்பத்தியும் அதிக அளவில் நடைபெறுகிறது.

பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தை மூன்று முறை தேர்வு செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்த தொகுதியாகும். இதுவரை 14 முறை நடைபெற்றுள்ள பேரவைத் தேர்தலில், இந்தத் தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில் கவுண்டர், செட்டியார், நாடார், தேவர், தலித் எனப் பல்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், திமுக சார்பில் மாவட்டச் செயலர் தமிழ்மணி, கொமதேக சார்பில் மாவட்டச் செயலர் நித்தியானந்தம், தேமுதிக சார்பில் முத்துக்குமார், பாஜக சார்பில் வழக்குரைஞர் சிவக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன்:

பொள்ளாச்சி அருகேயுள்ள திப்பம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட இவர், முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 2001, 2006 பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றவர். 2011 தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

ஏற்கெனவே பொள்ளாச்சியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிராமப் பகுதிகளுக்கு குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செய்தவர். பொதுமக்களிடம் குறிப்பாக, அடித்தட்டு மக்களிடம் எளிமையாகவும், அன்பாகவும் பழகுபவர். உடுமலை தொகுதி பேரவை உறுப்பினராக 2011-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுபவர் என இவருக்குச் சாதகமான பல அம்சங்கள் உள்ளன. இருப்பினும், கல்விக் கடன் ரத்து, பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற திமுகவின் தேர்தல் அறிக்கை திட்டங்கள் இவருக்கு பாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர். தமிழ்மணி:

திமுகவின் மாவட்டச் செயலர். முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த ராஜுவின் மகன். மாவட்டச் செயலராக அனைத்துத் தொகுதிகளிலும் வலம் வந்ததால், பொள்ளாச்சியில் கவனம் செலுத்தியது குறைவு என்றே கூறப்படுகிறது. மக்கள் பிரச்னைகளை அதிகம் முன்னெடுத்து போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என்பதும் இவருக்கு பாதகமாகக் கூறப்படுகிறது.

கே. நித்தியானந்தம்:

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்டச் செயலராக உள்ள இவர் விவசாயம், வியாபாரத்தை தொழிலாகச் செய்து வருகிறார். கடந்த 2011 தேர்தலில் போட்டியிட்டு 51 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர். இவர் கட்சிப் பணிகளில் அதிகம் ஈடுபடுவதைப் போன்று பொதுச் சேவையிலும் அதிகம் ஈடுபடுபவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியப் பிரமுகராக இருந்தாலும், எதிர்த்துப் போட்டியிடும் திமுக, பாஜக, தேமுதிக வேட்பாளர்களும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.

சு. முத்துக்குமார்:

வால்பாறை தொகுதி தேமுதிக பொறுப்பாளர். வால்பாறை தொகுதியில் அதிகமான சமூக சேவைகள், கோயில் திருப்பணிகள் செய்தவர், ஏழைகள், தலித்துகள் என அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் அன்பாகப் பழகுபவர். இருந்தபோதும், பொள்ளாச்சி தொகுதிக்கு புதுமுகம் என்பது இவருக்குப் பாதகமானதாகும். இருப்பினும், கூட்டணிக் கட்சியினரால் கணிசமான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரா. சிவக்குமார்:

பாஜக கோவை மாவட்டத் துணைத் தலைவராக உள்ளவர். வழக்குரைஞருக்குப் படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவரது தந்தையும் மூத்த வழக்குரைஞர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் இவர் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது.

வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி வாக்கு:

இந்தத் தொகுதியில் அதிக அளவில் கொங்கு வேளாளக் கவுண்டர்களும், அதற்கு அடுத்தபடியாக தலித்துகள், செட்டியார், நாடார் என பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர். தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனைத் தவிர பிற முக்கிய கட்சிகளான கொமதேக, திமுக, தேமுதிக, பாஜக கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கவுண்டர் சமுதாய வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் செட்டியார் சமூகத்தில் வேறு யாரும் பலமான வேட்பாளர்களாக இல்லை. இதனால், செட்டியார் சமூகத்தின் வாக்கு அதிகமாகக் கிடைக்கும். மேலும், கவுண்டர்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் வாக்குகளையும் கணிசமான அளவில் இவர் பெறுவார்.

ஜெயராமன் ஏற்கெனவே இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பதாலும், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்பவர் என்ற பெயர் இருப்பதாலும் பொள்ளாச்சியில் மீண்டும் அதிமுக கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அந்தக் கட்சியினர் நம்புகின்றனர்.

-என்.ஆர்.மகேஷ்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.