புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தலைவர்களின்வெற்றியும் தோல்வியும்!

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அவ்வப்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. அந்த வகையில், 1957-க்குப் பின்னர் மனித உரிமைப் போராளியாகக் கருதப்பட்ட எம். பக்தவத்சலம்,

News image
Updated On :8 மே 2016, 8:00 pm

தி. ராமகிருஷ்ணன்

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அவ்வப்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. அந்த வகையில், 1957-க்குப் பின்னர் மனித உரிமைப் போராளியாகக் கருதப்பட்ட எம். பக்தவத்சலம், பெருந்தலைவர் என போற்றப்பட்ட கே. காமராஜர், தென்னாட்டு பெர்னாட் ஷா என அழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை, முத்தமிழறிஞர் என அழைக்கப்படும் மு. கருணாநிதி, புரட்சித் தலைவர் எனப் போற்றப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன், புரட்சித் தலைவி என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வர்களாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்காத தலைவர்கள். காமராஜர், அண்ணா,பக்தவத்சலம், ஜெயலலிதா ஆகியோர் பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டவர்கள்.

காமராஜர்:

1957 பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர், சுயேச்சை வேட்பாளர் ஜெயராமரெட்டியை 4,717 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர், 1962 தேர்தலில் அதே தொகுதியில் தன்னை எதிர்த்து மீண்டும் போட்டியிட்ட ஜெயராமரெட்டியை 10,444 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், 1967 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சீனிவாசனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோல்வியடைந்தார். அவரது இந்தத் தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பக்தவத்சலம்:

1957 பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பக்தவத்சலம், சுயேச்சை வேட்பாளர் அண்ணாமலையை 4,737 வாக்குகள் வித்தியாசத்திலும், 1962 தேர்தலில் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலையைவிட 1,237 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் வெற்றி பெற்றார். ஆனால், 1967 தேர்தலில் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் பக்தவத்சலம் தோல்வியடைந்தார். பக்தவத்சலத்தின் இந்தத் தோல்வியும் அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

அண்ணா:

1957 பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனைவிட 11,143 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், 1962 தேர்தலில் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரிடம் 9,190 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா தோல்வியடைந்ததால், பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவானது. பின்னர், சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அண்ணா, 1967-இல் முதல்வராகப் பதவியேற்றார்.

கருணாநிதி:

 1957 பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். 1962 தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரைக் காட்டிலும் 1,928 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகமூர்த்தியைவிட 20,482 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1971 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குடந்தை ராமலிங்கத்தைவிட 12,511 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1977 தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தியை விட 16,438 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும்,1980 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எச்.வி.ஹண்டேயைவிட 699 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் கருணாநிதி வெற்றி பெற்றார்.

1984-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. பின்னர், 1989-இல் நடைபெற்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ. வகாப்பைவிட 31,991 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும்,1991 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுப்புவைவிட 890 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1996 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனைவிட 35,784 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 2001 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரனைக் காட்டிலும் 4,834 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 2006 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தாவூத் மியாகானைவிட 8,526 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 2011 தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம். ராஜேந்திரனைக் காட்டிலும் 50,249 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் கருணாநிதி வெற்றி பெற்றார். பேரவைத் தேர்தலில் 13-ஆவது முறையாகப் போட்டியிடும் கருணாநிதி இந்தத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர்.:

திமுகவில் இருந்து பிரிந்து 1972-இல் அதிமுக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். முதன் முதலாக 1977 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வையைக் காட்டிலும் 29,378 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1980 தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தைவிட 21,086 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 1984 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கராஜைவிட 34,484 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் வெற்றி பெற்று, மூன்று முறையும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா:

 இவர் முதல் முறையாக 1989 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தாயக மறுமலர்ச்சி கழக வேட்பாளர் டி. ராஜேந்தரைக் காட்டிலும் 37,215 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அதே தேர்தலில் காங்கயம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரைவிட 33,291 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துமனோகரனைவிட 28,731 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வென்றார். ஆனால், 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். அவரது இந்தத் தோல்வியும் அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

2001 தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக, அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 2002-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரைக் காட்டிலும் 41,201 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 2006 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சீமானைக் காட்டிலும் 25,186 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என். ஆனந்தைவிட 41,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

இந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்ற நிலையில், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனைவிட 1,50,722 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வென்றார். இந்தத் தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா.

-தி. ராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.