தேர்தல் வரலாறு – 7: இந்திய தேசிய காங்கிரஸ்

பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார்.


ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume), 1829-ல் இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர். ஆலன், கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வுபெற்று, இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட காரணமானவர்களில் இவரும் ஒருவர்.

1870 முதல் இந்திய அரசின் செயலராகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். உதாரணமாக, மதுக்கடைகளை அதிகப்படுத்துவதன் மூலம் வருவாயை பெருக்கும் அரசின் திட்டத்தை அவர் கடுமையாகக் கண்டித்தார்.

ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்போது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து, 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில், விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறைகளின் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.

1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன், ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார். மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. இதன் காரணமாக, செயலாளர் பணியிலிருந்து ஆலன் பதவியிறக்கம் செய்யப்பட்டு, வடமேற்கு மாகாணத்தின் வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை, "நேர்மையான ஒரு அதிகாரி, ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்’’ என்று பத்திரிகைகள் கண்டித்தன.

1882-ல் தனது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்தார். ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி, அவர்களுக்கு முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியாவுக்கான ஒரு அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்ற நண்பர்கள், இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இருந்து இந்தியர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினர். இந்தியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கல்கத்தா பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு, 1883, மார்ச் 1-ல், வெளிப்படையான ஒரு வேண்டுகோளை வெளியிட்டார்.

வில்லியம் வெட்டர்பர்ன்

வில்லியம் வெட்டர்பர்ன், இந்தியன் சிவில் சர்வீசில் 1860-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றினார். ஆலன் ஆக்டேவியன். ஹியூம் ஆகியோருடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாகப் பாடுபட்டார்.

1885-ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் இயக்கம், தொடக்கத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது, இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கித் தருவதுதான் இதன் குறிக்கோளாக இருந்தது. உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன், ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், தின்சா வாச்சா ஆகியோரின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது காங்கிரஸ் இயக்கம். காங்கிரஸின் முதல் தலைவராக, பம்பாயில் 1885-ல் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர், இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர். இவர், 1878-ல் ‘தி இந்து’ என்ற செய்தி இதழை நிறுவி, 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தார். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை 1882-ல் தொடங்கினார். சமூகச் சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்கு முன்மொழிந்தவர் இவரே.


காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் கூட்டம், 1888-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால், காங்கிரஸ் இயக்கத்துக்கு ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ (Indian National Congress) என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில், சுரேந்திரநாத் பானர்ஜியின் இந்திய தேசிய யூனியன் (Indian National Union), காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இக்கட்சி, விடுதலைப் போரில் தீவிரம் காட்டத் தொடங்கியது. 1907-ல், காங்கிரஸில் தீவிரப் போக்கு உடையோர், மிதமான போக்கு உள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரப் போக்கு உடையோர் பாலகங்காதர திலகர் தலைமையிலும், மிதமான போக்கு உடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக காங்கிரஸ் உருவாகியது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக, லட்சக்கணக்கான மக்களைத் திரட்டியது.

இந்திய விடுதலைப் போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை, காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.


1885 முதல் 1908 வரை நடந்த காங்கிரஸ் மாநாடுகளின் விவரங்கள் பின்வரும் அட்டவணையில்:

சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் (C. Vijayaraghavachariar) என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார், அரசு ஊழியராகவும் வழக்கறிஞராகவும் இருந்தவர். 1875-ல், சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1882-ம் ஆண்டில் சேலம் மாநகரச் சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்து, 1895-ல் சென்னை மாநிலக் கவுன்சில் உறுப்பினராகவும், 1913-ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1882-ல் நடைபெற்ற சேலம் இனக்கலவரத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, 10 ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடி விடுதலையானார். இதனால் 'சேலத்து நாயகன்' எனவும் 'தென்னிந்தியாவின் சிங்கம்' எனவும் பாராட்டப்பட்டவர். மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸின் அரசியலமைப்பை உருவாக்கினார்.

அன்னி பெசன்ட்

1907-ல், சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் இயக்கத்தில் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னௌவில் நடைபெற்ற மாநாட்டில், இரு பிரிவினரையும் இணைத்து வெற்றிகண்டார். ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதிலும் அதன் கிளைகள் உருவாயின.

அன்னி பெசன்ட், தனது தலைமைப் பதவிக் காலத்தில், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார். அன்னி பெசன்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917-ல் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்வானார். லாகூரில், ஜவகர்லால் நேரு தலைமையில் 1929-ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில், முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது.

1866-ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளராக இருந் கோகலே, 1889-ல் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர் ஆனார். 1905-ல் கோகலே, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார்.

பால கங்காதர திலகர், 1856-ல் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார். இந்திய காங்கிரஸ் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1889-ல் காங்கிரஸில் சேர்ந்தார். 1907-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸில் உருவான இரு பிரிவினரில், தீவிரப்போக்கு உள்ள பிரிவினருக்குத் தலைவரானார். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, தொடர்ந்து மக்களிடையே பிரசாரம் செய்தார்.

லாலா லஜபதி ராய், 1865-ல் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். 1888-ல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதியாக விளங்கி, போராட்டக் காலத்திலேயே தனது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர்.

வங்காளத்தைச் சேர்ந்த பிபன் சந்திர பால், 1886-ல் காங்கிரஸில் சேர்ந்தார். சுதந்தரம் என்பது பிச்சையிட்டு வாங்குவது அல்ல; போராடிப் பெற வேண்டிய பிறப்புரிமை என்று முழங்கினார்.

மோகன்தாஸ் காந்தி, 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இறந்தார். பாரிஸ்டர் எனப்படும் வழக்குரைஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1924-ல், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பிறந்தவர். உருது மொழியில் ஜவஹர் இ லால் என்றால், "சிவப்பு நகை" என்று பொருள். 1916-ல் லக்னௌவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியைச் சந்தித்தார். பின்னர், காந்தியுடன் இணைந்து காங்கிரஸில் பணியாற்றினார்.

சர்தார் வல்லபாய் படேல், 1875-ல் குஜராத்தில் பிறந்தவர். வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டார். சுதந்தர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

1884-ல், வத்தலக்குண்டுவில் பிறந்தார். 1920 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 முதல் துறவி போன்று காவி உடை அணியத் துவங்கினார். ஸ்வதந்ரானந்தர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன் தாஸைக் கொண்டு செய்தார். கோயில் கட்டுமானம் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.

சத்தியமூர்த்தி, 1887-ல் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் பிறந்தார். சென்னை கிறிஸ்ததவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரித் தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். தனது பேச்சாற்றல் மூலம், காங்கிரஸின் பிரதிநிதியாக, மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்துக்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில், சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க, பிரிட்டிஷ் அரசுடன் போராடி, பூண்டி நீர்தேக்கத்துக்கான வரைவு ஒப்புமை பெற்று, அதற்கான அடிக்கல்லை நாட்டினார். 1944-ல் பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது அவர் உயிருடன் இல்லை. அவரது முதன்மைச் சீடரான காமராஜர், தமிழக முதல்வரான பிறகு, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை வைத்தார்.

சி. ராஜகோபாலாச்சாரி, ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில், 1878-ல் பிறந்தார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்டார். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர்.

1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகரத் தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸில் சேர்ந்து, ரௌலட் சட்டத்துக்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930-ல் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின்போது வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.

1937-ல், மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாகப் பொறுப்பேற்றார். காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

காமராஜ், 1903-ல் விருதுநகரில் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து மக்கள் பணி செய்தார். மூன்று முறை தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியைவிட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி, அவர் கொண்டுவந்த திட்டம்தான் K PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்'. இதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களது பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணி ஆற்றச் செல்ல வேண்டும் என்றார். இவரது இந்தக் கருத்தை நேரு அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு, 1963-ல் முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு, டெல்லி சென்றார் காமராஜ். அகில இந்தியக் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1966-ல், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது, இந்திரா காந்தியைப் பிரதமாகத் தேர்வு செய்ததில் காமராஜுக்கு கணிசமான பங்கு இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள்

(இந்திய விடுதலைக்கு முன்)

1. உமேஷ் சந்தர் பானர்ஜி

2. தாதாபாய் நௌரோஜி

3. வில்லியம் வெட்டர்பர்ன்

4. பத்ரூத்தின் தையூப்ஜி

5. ஜார்ஜ் யூல்

6. பெரஸ்ஷா மேத்தா

7. ஆனந்தாச்சார்லு

8. ஆல்பிரட் வெப்

9. சுரேந்திரநாத் பானர்ஜி

10. ரகமத்துல்லா எம். சயானி

11. சி. சங்கரன் நாயர்

12. ஆனந்த மோகன் போஸ்

13. ரமேஷ் சந்தர் தத்

14. என். ஜி. சந்தவர்கர்

15. தின்ஷா எடுல்ஜி வாட்சா

16. சுரேந்திரநாத் பானர்ஜி

17. லால்மோகன் கோஷ்

18. ஹென்றி ஜான் ஸ்டெட்மென் காட்டன்

19. கோபால கிருஷ்ண கோகலே

20. தாதாபாய் நௌரோஜி

21. ராஷ்பிகாரி போஸ்

22. மதன் மோகன் மாளவியா

23. வில்லியம் வெட்டர்பன்

24. பிசன் நாராயணன் தர்

25. இரகுநாத் நரசிங்க முதோல்கர்

26. நவாப் சையத் முகமது பகதூர்

27. புபேந்திர நாத் போஸ்

28. சத்தியேந்திர பிரசன்ன சின்கா

29. அம்பிகா சரண் மசூம்தார்

30. அன்னி பெசன்ட்

31. மதன் மோகன் மாளவியா

32. சையத் உசேன் இனாம்

33. மோதிலால் நேரு

34. லாலா லஜபதி ராய்

35. சேலம் சி. விஜயராகாவாச்சாரி

36. ஹக்கீம் அஜ்மல் கான்

37. சித்தரஞ்சன் தாஸ்

38. முகமது அலி சௌகர்

39. அபுல் கலாம் ஆசாத்

40. மகாத்மா காந்தி

41. சரோஜினி நாயுடு

42. எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார்

43. முக்தர் அகமது அன்சாரி

44. மோதிலால் நேரு

45. ஜவகர்லால் நேரு

46. வல்லபாய் படேல்

47. மதன் மோகன் மாளவியா

48. நெல்லி சென்குப்தா

49. இராசேந்திர பிரசாத்

50. ஜவகர்லால் நேரு

51. சுபாஷ் சந்திர போஸ்

52. அபுல் கலாம் ஆசாத்

இந்திய விடுதலைக்குப் பின்

1. ஆச்சார்ய கிருபளானி

2. பட்டாபி சீதாராமய்யா

3. புருசோத்தம் தாஸ் டாண்டன்

4. ஜவகர்லால் நேரு

5. யு.என். தேபர்

6. இந்திரா காந்தி

7. நீலம் சஞ்சீவ ரெட்டி

8. கே. காமராஜ்

9. நிஜலிங்கப்பா

10. ஜெகசீவன்ராம்

11. சங்கர் தயாள் சர்மா

12. தேவ்காந்த் பரூவா

13. இந்திரா காந்தி

14. ராஜீவ் காந்தி

15. பி.வி. நரசிம்ம ராவ்

16. சீதாராம் கேசரி

17. சோனியா காந்தி

மகாத்மா காந்தி, 1948 ஜனவரி 29 அன்று, காங்கிரஸை கலைத்துவிட்டு பொதுமக்கள் சேவை மையமாகச் செயல்பட வேண்டுமெனக் கூறியதுடன், அதற்கான தீர்மானத்தை இயற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார நூல்கள்

  1. Allan Octavian Hume by William Wedderburn 1913

  2. Proceedings of First Indian National Congress-1885, 1905

  3. 320 Million Judges by G.G. Mirchandani

  4. History of the Indian National Congress_B Pattabhi Sitaramayya 1935

  5. Indian national Congress_G.A.Natesan & Co 1910

  6. http://www.dailypioneer.com/nation/mahatma-wanted-to-bury-the-inc-once-and-for-all.html

  7. The Congress Party in India: Policies, Culture, Performance by N.S. Gehlot

  8. Beyond Doubt: A Dossier on Gandhi's Assassination by Teesta Setalvad

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com