இளம் வயதில் எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, எனது தாயாரின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. தற்பொழுது நலமாக இருந்தாலும், திருமண வாழ்க்கை, மழலை பாக்கியம் உண்டாகுமா என்று அச்சமாக இருக்கிறது. மணவாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறவும்..!
-வாசகி, திருச்சி.
உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி சந்திர பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது) பெற்று நவாம்சத்தில் உச்சமடைகிறார்.
சந்திரபகவான் மனோ காரகர் (மனதை நிர்ணயிப்பவர்), அன்னையின் நிலைமையை உணர்த்துபவர், தானியங்களில் நெல், அரிசியையும், உடலில் இடது கண், நவரத்தினங்களில் முத்து போன்றவற்றிற்கும் காரகராகிறார்.
அவரே தனு (உடல்) காரகராகிறார். பொதுவாக லக்னத்தைக் கொண்டு பலன் கூறவேண்டும். சந்திரபகவான் தினக்கோளாகையால் அவரைக் கொண்டு, அதாவது ராசியைக் கொண்டு பலன்களைக் கூறலாம் என்பது சத்தியாச்சாரியாரின் வாக்கு.
சந்திர பகவான் ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் வலுத்திருந்தால்தான் நமது தோற்றம் பொலிவுடனும், திட ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்.
பொதுவாக சந்திர பகவான் தனித்து இயங்குவதை விட, மற்ற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால்தான் முழு பலன் கொடுப்பார்.
வளர்பிறை சந்திர பகவான் சுபர் என்றும், தேய்பிறை சந்திரபகவான் அசுபர் என்றும் கூறுவார்கள். உங்களுக்கு வளர்பிறை சந்திர பகவானாகி சூரிய பகவானால் பார்க்கப்படுவதால் "பெளர்ணமி யோகம்' உண்டாகிறது.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில், ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார்.
பூர்வ புண்ணியாதிபதி ராசியிலும், நவாம்சத்திலும் சுப பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது.
பதினொன்றாமிடத்தில் குரு பகவான் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருவாய், மூத்த உடன்பிறந்தோர், சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பு, ஆதரவு, சுய சம்பாத்தியம் ஆகியவைகள் சுலபமாகக் கிடைக்கும்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில், சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். செவ்வாய் பகவான் பூமி, சகோதர காரகராவார்.
போலீஸ், ராணுவம், சமையல் ஆகிய தொழில்கள் ஏற்றது. குறிப்பாக தைரியத்திற்குக் காரகராகிறார். கோர்ட் விவகாரங்களும், நீதி ஆகியவைகளும் இவருடையதே!
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லக்னத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் இரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
சனி பகவான் ஆயுள் காரகர், நீதிபதி, உழைப்புக்கும் காரகம் வகிப்பவர் கர்ம காரகராகவும் ஆவதால் நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை "அணா பைசா' வரை சரியாகத் தருபவர் என்றால் மிகையாகாது.
ராகு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். கேது பகவான் லக்னத்தில் சுய சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
லக்னாதிபதி புத பகவானின் சாரத்தில் மறைவு பெற்றிருப்பது குறை. அதேநேரம் ரோகாதிபதி சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதும், சிறுநீரகம் சனி பகவானின் ஆதிக்கத்தில் உள்ளதாலும், ராகு மஹா தசையின் பிற்பகுதியில் உபாதை தோன்றியது.
அன்னை காரகர் சுய சாரத்தில் பலம் பெற்றதால், உங்கள் தாயின் சிறுநீரகம் உங்களுக்கு ஒத்து வந்து பொருத்தப்பட்டு, நலமாக உள்ளீர்கள். அதேநேரம், சனி பகவான் களத்திர ஸ்தானாதிபதியுமாகி குரு பகவானின் பார்வையைப் பெறுவதாலும், தற்சமயம் குரு மஹா தசையில் சுயபுக்தி நடப்பதாலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டு. மணவாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
நீளிரா படத்தின் ஓடிடி ஒப்பந்தம் முடிவாகவில்லை: கார்த்திக் சுப்பாராஜ்
உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!
வீடியோக்கள்

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

