

வருடம் முழுவதும் திறந்திருக்கும் ஒரு கோயிலும், அந்தக் கோயில் ஒரு நாளில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படும் அதிசயம் எங்குள்ளது? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில்களில் திருவார்ப்பு கிருஷ்ணர் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது. கோட்டயம் நகரத்திலிருந்து 6-8 கி.மீ தொலைவில் மீனாட்சி ஆற்றின் கரையில் திருவார்ப்புவில்அமைந்துள்ளது . (வார்ப்பு என்பது மணி உலோக பாத்திரங்களைத் தயாரிக்கக் கொல்லர்களால் பயன்படுத்தப்படும் வார்ப்பு ஆகும்) இங்குள்ள கிருஷ்ணர், பக்தர்களின் அனைத்துக் கறைகளையும், குறைகளையும் நீக்கும் கடவுள்.
பசி கிருஷ்ணர்
கம்சனைக் கொன்ற பிறகு, கிருஷ்ணருக்குப் பசியும், கோபமும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் அதே ஸ்வரூபத்தில் காட்சியளிக்கும் இடம் இப்போதும் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் உள்ளது. இங்குள்ள இந்த கிருஷ்ணர் எப்போதும் பசியுடன் இருப்பதாக ஐதீகம். எந்த நேரத்திலும் பசி எடுக்கும் என்பதால் தான், மற்ற கோயில்களைப் போலல்லாமல், இந்தக் கோயில் முழு பகலும் இரவும், வருடத்தின் 365 நாள்களும் திறந்திருக்கிறது. இரவு 11.58 மணி முதல் 12.00 வரை அதாவது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இக்கோயிலின் நடை அடைக்கப்படும்.
இந்த கிருஷ்ணருக்கு நான்கு கைகள் உள்ளன, வலது கையில் உணவு உள்ளது, பின்புற கைகளில் சங்கு மற்றும் சக்கரம் உள்ளன. இந்த கிருஷ்ணரின் தோற்றம் குறித்துப் பல கதைகள் உள்ளன. அவை அனைத்தும் நான்கு கைகளைக் கொண்ட கிருஷ்ணரின் சிலையை ஒரு உருளியில் (மணி உலோகத்தால் செய்யப்பட்ட தட்டையான பாத்திரம்) மீட்டெடுத்தது பற்றிப் பேசுகின்றன.
இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்தபோது, கிருஷ்ணர் அவர்களுக்கு நான்கு கைகளைக் கொண்ட தனது சிலையை வழங்கினார், இதனால் அவர்கள் தினமும் அதை வணங்க முடியும். பாண்டவர்கள் காட்டில் தங்கள் வனவாசத்தை முடித்துவிட்டுத் திரும்பிச் செல்ல விரும்பியபோது, அந்தப் பகுதி மக்கள் அந்த சிலையைக் கேட்டார்கள். இது சேர்த்தலை மக்களால் வழிபடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால், அவர்களால் அந்த சிலையை வைத்து வழிபாட்டைத் தொடர முடியவில்லை. எனவே அவர்கள் அந்த சிலையைக் கடலில் வீசிவிட்டனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு துறவியான பில்வமங்கள சுவாமி (ஆதிசங்கரரின் சீடர் பத்மபதர் என்றும் அழைக்கப்படுகிறார்) சிலை வீசப்பட்ட இடத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் பயணித்த படகு ஒரே இடத்தில் நகர முடியாமல் திடீரென்று தண்ணீர் வற்றியது, கிருஷ்ணரின் சிலை தோன்றியது. துறவி அந்த சிலையை எடுத்துக்கொண்டு மேற்குப் பக்கம் பயணித்தார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், குன்னம், பள்ளிக்கார வழியாக கிழக்குப் பக்கம் சென்று, தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தை அடைகிறது. அந்த கோயிலில் எந்த சிலைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்டார் துறவி. பின்னர் அவர் அந்த சிலையை அந்த கோயிலில் வைத்து வழிபாட்டிற்குத் தகுதியானதாக மாற்றினார்.
பண்டையக் காலங்களில், கடவுளுக்கு மாங்காய் ஊறுகாய், தேங்காய் தண்ணீர் (இளநீர்) மட்டுமே காணிக்கையாக அளிக்கப்பட்டது. கிருஷ்ணர் சிலை இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இன்றும், ஆராட்டு (கேரளத்தில் நடைமுறையில் உள்ள ஒரு சடங்கு) நடைபெறும்போது கிருஷ்ணர் சிலை மடத்திற்கு (சாமியார் மடம்) கொண்டு செல்லப்பட்டு மாங்காய் ஊறுகாய் மற்றும் தேங்காய் தண்ணீர் (இளநீர்) வழங்கப்படுகிறது. இக்கோயிலில் சிவன், பகவதி, கணபதி, சுப்பிரமணியர், யட்சி சன்னதிகளும் உள்ளன.
திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலின் சிறப்பு
இந்த கோயிலில் உள்ள கிருஷ்ணரை வணங்கி, பிரசாதம் சாப்பிடுவர்கள் நவக்கிரக தோஷம், கிரகண தோஷம், சந்தான தோஷம், சர்ப்ப தோஷம், விவாக (திருமண) தோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவார்கள். நவக்கிரகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் முப்பத்து மூன்று தேவர்கள் கிருஷ்ணருடன் வலுவான உறவில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கோட்டயம் ரயில் நிலையம் கோயிலிலிருந்து 8.2 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன் தனது நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி இருக்கிறார். அதிகாலை 2 மணியளவில் கோயில் திறக்கப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் உஷ பாயசம் எனப்படும் சிறப்புப் பிரசாதம் இந்த இறைவனுக்குப் படைக்கப்படுகிறது. இது அரிசி, வெல்லம், நெய், கதலி வாழைப்பழம் மற்றும் உலர்ந்த தேங்காய் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. அரிசி நன்கு வெந்ததும், உருக்கிய வெல்லம் தானாகவே நிற்கும் வரை அதில் ஊற்றப்படுகிறது. இந்த தயாரிப்பு முறை இந்த கோயிலுக்கு மிகவும் தனித்துவமானது.
திருவார்ப்பு கோயிலில் எந்த நேரத்திலும் பிரசாதம் வழங்கப்படும். மேலும், பக்தர்கள் பிரசாதம் விநியோகிப்பதில் பங்கேற்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
இதையும் படிக்க: ஒரே பரிகாரம் எல்லோருக்கும் பலனளிப்பதில்லை ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.