ஆனியில் நிச்சயம் செய்யக்கூடாதவை.. ஜோதிடம் சொல்வதென்ன?

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் இந்த விஷயங்களை செய்யவேண்டாம் என்கிறது ஜோதிடம்..
aani month
ஜோதிடம்
Published on
Updated on
2 min read

ஒவ்வொரு நடுத்தர மக்களுக்கும் வீடு வாங்குவது மற்றும் வீடு கட்டுவது என்பது ஒரு கனவாகவே உள்ளது. வீடு வாங்கும் முன் தாய் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா, எவ்வளவு கடன் வாங்க நேரிடும், வாஸ்து முறைப்படி வீடு உள்ளதா என்று பல்வேறு குழப்பநிலை மனதில் இருக்கும். அதுதவிர வீடு கட்டும் பில்டர்கள், மேஸ்திரிகளுடன் ஏதாவது ஒரு பிரச்னை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். கடைசியாக வீடு கட்டி முடித்த பிறகும், கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த மாதமில்லாமல் அங்கும் தடை எழும்.

புதிதாக வீடு கட்டி குடிபுகும்போது நாம் ஒருசில விஷயங்களை கட்டாயம் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். அதில் ஒன்றுதான் கிரகப்பிரவேசம். புதுமனைக்குச் செல்ல உகந்த நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கட்டிய வீட்டைப் பல நாள்கள் பூட்டி வைக்கவும் கூடாது. வீடு வாங்குவதற்குக் கொடுக்கும் முன்னுரிமை போலவே பூமி பூஜை, வாசக்கால் பூஜை, புதுமனை புகுவிழா சரியான முறையில் அவரவர் முன்னோர்களின் வழிகாட்டுதல்படி செய்வது நன்று. வீட்டில் வாஸ்து பூஜை, ஹோமங்கள் குறிப்பிட்ட முகூர்த்த நாள்களில் செய்வது வீட்டின் சுபிட்சத்தைக் காட்டும்.

சூரிய பகவான் 12 கட்டத்தில் நகரும் மாதங்களே தமிழ் மாதங்கள் ஆகும். பன்னிரண்டு மாதங்களில் திருமணம், வீடு குடிபுகுவதற்கு, வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு என்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ஒரு சில மாதங்கள் சிறந்தது. முக்கியமாக ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்கிற நான்கு மாதங்கள் அழித்தல் கூறிய மாதங்களாகச் சொல்லப்படுகிறது. இந்த மாதங்கள் வீடு கட்ட, வீடு குடிபுக சிறப்பான மாதங்கள் அல்ல. ஆனி மாதத்தில் கடவுளுக்குச் செய்ய வேண்டிய பூஜைகள் மற்றும் குடமுழுக்கு செய்யலாம்.

கூனி ஆனி புரட்டாசி மார்கழி

"ஊனமான ஒரு நான்கு மாதமும் மானியாமன மனைகுடி தான் புகில் ஈனமாகி இடர் செயும் நோய்களே” இவற்றின்படி ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வாஸ்து புருஷனாகிய பூமி காரகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். எனவே இந்த மாதத்தில் கட்டடப் பணிகளைத் துவங்கக் கூடாது, குடி புகவும் கூடாது. அவ்வாறு செய்தால் குடும்பத் தலைவனுக்குத் தீராத உடல் நலம் குன்றும்.

வீடு சுபிட்சம் செய்யும் வாஸ்து அதிபதி தூக்கத்தில் இருக்கும் பொழுது நமக்குப் பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைக்காது. எனவே நம் முன்னோர்கள் இந்த மாதங்களைத் தவிர்த்தனர். ஒரு சிலர் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கும் பொழுது வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாழிகையில் வாஸ்து பூஜை செய்வதால் தடைகள் விலகும்.

”ஆனி அடி போட்டாலும்

கூனிக் குடியேறாதே!” - என்பது பழமொழி.

ஆனி மாதத்தில் வீட்டில் அடி வைப்பதும், பங்குனி மாதத்தில் வீடு குடியேறுவதும் கூடாது என்பது இதன் பொருள். சூரிய பகவான் வடக்கு திசை நோக்கி, ரிஷபத்திலிருந்து மிதுனத்தில் சென்றடையும் கடைசி உத்ராயன புண்ணிய காலமே ஆனி மாதம். அறிவியல் ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்த காலகட்டத்தில் வீட்டில் அடித்தளம் அமைக்க, பூமியைக் குடையும் பொழுது சூட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் அங்கு வேலை செய்பவர்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்க இந்த மாதம் உகந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது.

கால புருஷனுக்கு நான்காவது ராசி கடகம், அதற்கு 12வது ராசி மிதுனம் நமது சூரியன் சஞ்சாரிக்கும் காலம் ஆனி மாதம் அது விரயத்தையும் அழிவையும் ஏற்படுத்தும். இந்த மாதத்தில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய ராஜ பதவியை இழந்த மாதம் என்று சொல்லப்படுக்கிறது. அதனால் நம் முன்னோர்கள் இந்த மாதத்தை தவிர்க்கின்றனர். முக்கியமாக ஆனி மாதத்தில் எந்த சுப காரியங்கள் செய்தாலும் வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. ஆனால் வீடு கட்டும் மாதம் ஆனிக்கு முன்பே ஆரம்பித்தால் நன்று. இந்த ஆனி மாதத்தில் வீட்டின் மேல் தளம், முதல் மாடி என்று அமைக்கலாம்.

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்கள் மற்றும் வளர்பிறை நாள்களில் புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் சிறந்த நாள்களில் கிரகப்பிரவேசம் வைப்பது நன்று. வீடு கிரகப்பிரவேசம் செய்ய, காலண்டரில் வரும் சுபமுகூர்த்த நாள்களை பின்பற்றாமல் சரியான ஜோதிடர்களிடம் அவரவர் வீட்டை ஆளும் குடும்பத் தலைவி மற்றும் தலைவனின் ஜாதகத்தை கொடுத்து சுபமுகூர்த்த நேரத்தை குறித்துக் கொள்ளவும். வீடு கிரகப்பிரவேசம் மற்றும் பூஜை செய்யும் நேரம் ஒருவரின் குடும்ப வளர்ச்சி மேல் நோக்கி இருக்கும்.

SUMMARY

One should not set foot in a house during the month of Aani and move into a house during the month of Panguni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com