

காலபுருஷ தத்துவப்படி கடக லக்னம் என்பது நான்காம் வீடு. நான்காம் பாவம் தொழில் திறமை, வீடு வாகனம், புதையல், எல்லா வித சுக போகங்கள், கால்நடை, குடும்ப ஒற்றுமை மற்றும் கற்பு என்று பல்வேறு காரகங்களைக் கொண்டது.
கடக ராசியில் புனர்பூசம் (4), பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் என்று 9 பாதங்கள் உள்ளன. இது நீர் தத்துவம் கொண்ட சர ராசி. வயது முதிர்வுக் காலத்தில், இவர்கள் தங்கள் பாசத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்டி தன்னுடைய சிறகுக்குள் வைத்திருக்கும் ஒரு பாசமிக்கவர். ஒரு குறிப்பிட்ட வயது வரை இவர்களின் சுகம் என்பது தாயின் கருவறை மற்றும் அன்னையின் மடி.
கடக லக்னத்தை முக்கியமான ஹீரோக்கள் லக்கினாதிபதி சந்திரன், யோகர் செவ்வாய், குரு ஆவார். இவருக்கு வில்லன் என்றால் புதன், சனி, ராகு கேது. மாராகத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தருபவர் சனி, சூரியன். கடகத்திற்கு சுக்கிரன் 4,11க்கு உரியவர், முழு பாதகாதிபதி மற்றும் அரை சுபர். சுக்கிரன் சுகத்தையும் லாபத்தையும் தரவல்லவர், இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் ஜாதகருக்கு பாதகத்தை செய்ய காத்திருப்பார். கடக ராசியின் அதிபதி ஒளிமிக்க சந்திரன் 11ம் வீடான சுக்கிரன் வீட்டில் உச்சம் மற்றும் 6ம் வீடான செவ்வாய் வீட்டில் நீச்சம். இதில் வளர்பிறை சந்திரன் அதிக சுபத்துவம் மிக்கவர். சந்திரன் என்பவர் மனதைத் தொடும் பாசக்கார வித்தைக்காரன். ஒரு மாதத்திற்குள் சந்திரன் மட்டும்தான் அதிவேகமாக 27 நட்சத்திரங்கள் கூடிய 12 ராசி கட்டத்தின் மேல் பயணிப்பார்.
சூரியனை சிவன் என்றும் சந்திரனை பார்வதி என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அதனால் தான் காலபுருஷ தத்துவப்படி சந்திரனுக்கு அருகில் சூரியன் அமர்ந்துள்ளார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே வீடு. சூரியன் மேஷத்தில் உச்சமாகிறார் சந்திரன் அவரருகிலே ரிஷபத்தில் உச்சமாகிறார். சந்திரன் என்பவர் பெண் காரக உறவு என்றால் தாய், மாமியார் மற்றும் வீட்டில் உள்ள தலைவி.
கடகத்தின் சின்னம் நண்டு: நண்டின் தன்மை அது தன் எல்லா குட்டிகளையும் அரவணைப்பது போல இந்த கடக ராசிக்காரர்கள் அதிக பாசக்காரர்கள் மற்றும் அன்பால் அரவணைப்பவர்கள். நான்காம் பாவமான பாசமிக்க தாயின் ஸ்தானம் ஆகும். "நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு பழமொழிக்கு ஏற்ப இந்த லக்கினக்காரர்கள் மெல்ல தன்னை நுழைத்துக் கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள். ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்ற பழமொழி கடத்திற்குப் பொருந்தும். இந்த ராசிக்காரர்கள் வளர வளர இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அதாவது தங்கள் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலையில் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆண்டுக்கொருமுறை நண்டுகள் தங்களுடைய மேலோடுகளை அகற்றி புதுப்பித்துக் கொள்கின்றன. இவர்கள் தன் திறமைகளை கற்று பல்வேறு வழிகளில் தங்களுடைய அறிவை புதுப்பித்துக் கொள்வார்கள்.
கடக லக்கினகாரர் பாசமிக்கவர்கள், வசீகர கவரும் தன்மை, பிரகாசமான அழகு, அலைபாயும் மனம், பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள், தங்களுடைய வேலையில் மெருகேற்றிக் கொண்டே இருப்பார்கள், ஆளுமைமிக்க பதவி, எல்லோரையும் வழி நடத்தும் திறன் கொண்டவர்கள், பேச்சிலேயே ஆளை எடைபோடும் தன்மை கொண்டவர்கள், மூளை கட்டளையிடுவதற்கு முன் துரிதமாக தன் வேலையில் ஈடுபடுவார்கள், தனித்துவம் மிக்கவராகக் காட்டிக்கொள்பவர், தெய்வ அனுக்கிரகம் கொண்டவர், படபடப்பாக இருப்பவர், எல்லா ஜீவராசிகளிடம் அன்பு காட்டுவார், தலைமை பொறுப்பு மீது ஆசை, பெரிய மனிதர்களோடு நட்பு வைத்து கொள்வார். மாணவர்களுக்கு அவ்வப்பொழுது படிப்பில் தடுமாற்றம் இருக்கும். கடக ராசிக்கு தொழில் என்று எடுத்துக் கொண்டால் அரிசி மண்டி, பண்ணை, விவசாயம், கண் தொடர்பான வேலை, நீர் தத்துவம் கொண்ட துறை, கெமிக்கல், மற்றும் மளிகைப்பொருள் வியாபாரம், சிறுநீரகம் மற்றும் இதய மருத்துவத்தில் சிறந்தவராக இருப்பார்கள். கோச்சார ராகு மற்றும் குரு, நீர் ராசியான கடகத்தைத் தொடர்பு கொள்ளும் காலம் வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
ஒருவரின் மனதை ஆட்டிப் படைப்பவன் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து செயலுக்கும் உரியவர் சந்திரன். இவர் முக்கிய பாவமான கடக லக்னத்தின் ஆட்சியாளர். இவர்களுக்கு மனோகாரகனான சந்திரனுடன் பாவ கிரகங்கள் சேரும்போது மனதையும், உடலையும் பாதிக்கும். பொதுவாகவே இவர்கள் மூளை அதிவேகமாகச் செயல்படும். அதேபோல மனமும் ஒரே நிலையில் இல்லாமல் குழப்பமான நிலையில் இருப்பார்கள். இந்த ராசியினர் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். இவர்கள் மனோ வியாதியால் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களிலும் பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தும். கடக ராசியில் செவ்வாய் நீச்சமாகவும் குரு உச்சமாகும் இருப்பார். இவர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரியோர்கள் மற்றும் குருமார்களின் ஆசிர்வாதம் அவ்வப்போது கிடைக்கும். ஜோதிட ரீதியாகப் பார்க்கும்பொழுது சந்திரனோடு பாவிகள் சேர்க்கை, கொஞ்சம் கஷ்டமான மன அழுத்தத்தைத் தரும். அந்தந்த பாவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அளவு விகிதாசாரம் மாறுபடும். குருவின் பார்வை இருந்தால் சந்திரனால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
இக்காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் என்று பல்வேறு மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. முக்கியமான அசுப சேர்க்கை சந்திரன் ராகு / கேது ஆகும். கடக ராசியினருக்கு அசுப தசா புத்திகள் நடைபெறும் பொழுது உடலில் உள்ள நீர்க்கோர்வை உள்ள பகுதி, சிறுநீரகம், மார்பு, கணையம் மற்றும் ரத்த அணுக்களால் பிரச்னை ஏற்படும். இதுதவிர லக்கனாதிபதி சந்திரன் அசுபத்தன்மை பெற்றால் மன நோய், வாதம், கருச்சிதைவு ஏற்படும். சுட்டெரிக்கும் சூரியன் 2க்குரியவராவார். இவரின் பேச்சு சுருக் என்று இருக்கும், ஆனால் பேசிய பிறகு ஏன் இப்படிப் பேசினோமோ என்று வருத்தப்படுவார்கள். சந்திரனின் ஒளிக்கதிர் கடகத்திருக்கு அதிகம் உண்டு. அதனாலே இவர்களின் முகத்தில் உள்ள ஒளி பிரகாசமாக இருக்கும். இவர்களின் வாழ்க்கை எங்குப் பிரகாசம் தெரிகிறதோ அந்த வழியில் சென்று விடுவார்கள். தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் இடங்களில் இவரோடு சிம்ம ராசி நண்பர்கள் இருப்பார்கள். கடக லக்னக்காரர்களுக்கு புதன் சுபத்துவம் குறைவு அதனால் இவர்கள் படிப்பு சுமாராகவும் தைரியம் கொஞ்சம் குறைவாகவும் இருக்கும். செவ்வாய் 5 ,10க்கும் உரியவர். இவருடைய பூர்வ புண்ணியமே இவரின் கர்மாவாக வெளிப்படுத்தும். இந்த இடத்தில் செவ்வாய் ஒரு கேந்திராதிபதி, மற்றும் திரிகோணாதிபதியாக இருந்து யோகத்தைத் தருவார்.
கடக ராசிக்கு செவ்வாய் நீச்சம் பெற்று அவரின் ராஜ யோகத்தை அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப கூட்டியோ அல்லது குறைத்தோ சூட்சமாகச் செயல்படுவார். அதே சமயம் குரு உச்சம் பெரும் இடம் கடகம். செவ்வாய் மற்றும் குருவை வைத்து அவர்களின் செல்வ பாக்கியம், நிலம், சகோதர ஒற்றுமை, தந்தை நிலை, திருமணப் பந்தம், வேலை, கடன் மற்றும் நோயின் தன்மை தெரிய வரும். கடக லக்கினத்தில் சனியானவர் களத்திரகாரனாகவும், அவரே அஷ்டமாதிபதியாகவும் செயல்படுவார். சனி சந்திரன் அசுப பாவ தொடர்பு பெறும்பொழுது புனர்பூ தோஷத்தைத் தருவார். இந்த தோஷம் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவத்தின் தொடர்பான சிக்கல்களை உண்டாகும். எடுத்துக்காட்டாக 2,7ம் பாவத்தோடு தொடர்பு பெற்றால் திருமணம் என்பது கடைசி வரை ஒரு பீதியிலேயே இருக்கும்.
கடக ராசியினர் வணங்கும் தெய்வம்
மருத்துவர் திருத்தேவன்குடி கற்கடகேஸ்வர், அருமருந்து நாயகி, அபூர்வ நாயகி மற்றும் தன்வந்திரியை வழிபட்டால் வாதம், மன நோய், மற்றும் எல்லா வித நோய்களும் தீரும். கடக ராசியினர் பௌர்ணமி அல்லது திங்கள் கிழமைகளில் பழம்பெரும் சிவன் கோயிலில் உள்ள குளங்களில் குளித்து அம்பாளுக்குப் பூஜை செய்வது நன்று. இது தவிர சந்திரன் வழிபட்ட ஸ்தலங்கள், திருவரகுணமங்கை நத்தம், திருமணச்சேரி, பட்டீஸ்வர துர்க்கை, திங்களூர், திருவிடந்தை, திருவேள்விக்குடி மற்றும் கல்யாண கோலம் கொண்ட அனைத்து பழம்பெரும் சைவ வைணவ கோயில்களை தரிசிக்கலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அபிராமி அந்தாதி ஸ்லோகத்தை உச்சரிப்பது நன்று.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
இதையும் படிக்க: அனைத்து தோஷங்களையும் போக்கும் சோழ நாட்டு திருச்செந்தூர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.