வங்க இலக்கிய வானில் நிரந்தரமாகவே நிலாக்காலம்தான். இதோ மற்றுமொரு சான்று.
பொங்கிப்போகிறது அழியும் வாழ்க்கை! ஒரு சோகம் சுமந்த தலைப்போடு உருவாகியுள்ள இந்த மொழிபெயர்ப்பு நூல் வங்க எழுத்தாளர் மாணிக் பந்தோபாத்யாயவின் வரலாற்றைக் கூறும் நூல். சரியாகச் சென்னால், இது மாணிக்கின் வரலாறு என்பதை விட அவரது எழுத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் எனறே கூற வேண்டும். இதனை வித்தியாசமாகத் தந்திருப்பவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. ஆம்! மேற்கு வங்க முதலமைச்சர்தான்.
’எழுதுவது மூலம் நாட்டுக்கும் இனத்துக்கும் நன்மை செய்ய முடியும் என்று தோன்றினால் எழுதுங்கள். இல்லையெனில் எழுதாதீர்கள்’ என்று முழங்கிக்கொண்டு எழுதுகோல் ஏந்தியவர் மாணிக். இலக்கியத்தைப் படைக்கும் பொறுப்பு மேதைகளின் ஏகபோக உரிமையல்ல என்றவர். எல்லாச் சிறிய, பெரிய எழுத்தாளர்களுக்கும் அதில் சமமான பொறுப்பு உண்டு என்பதை வலியுறுத்தியவர். ‘ஒருவன் தனக்கே உரிய வாழ்க்கையைத் தத்துவமின்றி இலக்கியவாதியாக ஆக முடியாது’ என்று கூறி, ’கலை கலைக்காகவே’ என்னும் கொள்கையைத் ’தற்கொலைத் தன்மையுள்ள போக்கிரித்தனம்’ என்று வருணித்தார். எழுத்தைத் தொழிலாகக் கொண்ட எழுத்தாளன் விரும்பியோ, விரும்பாமலோ எஜமானனின் வர்க்க நலனுக்கேற்ப எழுத நேர்ந்துவிடுகிறது என்று கருதும் மாணிக், அந்த விபத்திலிருந்து தப்பி வந்த சில முழு நேர எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
பத்திரிகையை மையமாகக் கொண்டு விளம்பரப்படுத்திக் கொண்ட அவர் கால இலக்கியக் குழுக்களைத் திறமை குறைந்த, சாமர்த்தியம் வாய்ந்த சில இலக்கியப் புகழ் விரும்பிகளின் குழு’ என்று வருணித்து ஒதுக்குகிறார்.
முற்போக்கு என்ற பெயரில் மார்க்சியவாதிகளின் கையில் இலக்கியம் பிரசுரமாகிவிட்டது என்பவர்களது வாதத்தை வாங்கிக் கொண்டு, ‘பொய்ப் பிரசாரத்தைவிட உண்மைப் பிரசாரம் எவ்வளவோ மேல்’ என்று கூறி அவர்கள் வாயை அடைக்கிறார். தம் இருபத்தியோராம் வயதில் எழுதிய நாவலொன்றில் காதலைப் பற்றி மிகுந்த முதிர்ச்சியான அனுபவத்தை வெளிப்படுத்தியிருப்பதை வியக்கிறார் நூலாசிரியர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
நாவலில் ஒரு உரையாடல்:
‘’காதல் ரொம்ப நாள் நிலைக்காதுன்னு நீ சொன்னியே! நம் காதல் செத்துக்கிட்டிருக்கா?’’
‘’அதனாலென்ன… நம்ம காதல் சாகிறபோது வேற மனிதர்கள் காதலிப்பாங்க’’.
காதலின் அமரத்தன்மையை இப்படி விவரிக்கும் மாணிக், சாதாரணமானவனாக இருந்தாலும் சரி…. மேதையாக இருந்தாலும் சரி…. காதல் விதிக்கு ஆட்பட்டுச் சின்னாபின்னப் படுவதிலிருந்து தப்பிவிட முடியாது என்கிறார்.
அவர் மேலும், ‘ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது எல்லோரையும் காதலிப்பது; வாழ்க்கையை நேசிப்பது; உயிர் வாழ்வதில் மகிழ்ச்சி பெறுவது என்பதாகும்’ என்று விளக்குகிறார். இதைப் ’பத்மா நதிப் படகோட்டி’ (1936) என்னும் நாவலில் மிக அறுபுதமாகச் சித்தரித்துள்ளதாகப் புத்ததேவ் பட்டாச்சார்யா வியந்துள்ளார். இந் நாவலில் குபேர், கபிலா, மாலா ஆகியோரின் முக்கோணக் காதலைச் சித்தரிப்பதன் மூலம் முறையற்ற காதல் வெள்ளத்தின் ஈர்ப்புச் சக்தியையும், அதன் இருப்பையும் புலப்படுத்தியுள்ளார் என்றும் குபேர் – கபிலா உறவில் உள்ள வரையறை கடந்த தன்மை மனித வாழ்க்கை முறையைத் தகர்த்தெறிகிறது என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.
இதற்கான மர்மமான குறியீட்டுத் தன்மை வாய்ந்த மைனாத்தீவைப் படைத்துக் காட்டுகிறார் மாணிக். இயற்கையின் தவிர்க்க முடியாத ஈர்ப்பால், விதியின் அலைக்கழிப்பால் அல்லலுறும் மக்கள் கனவு காணும் மர்மப் பனிமூட்டமே மைனாத் தீவு என்கிறார் புத்ததேவ் பட்டாச்சார்யா. அங்கே மத வேற்றுமை இல்லை, காதல் உண்டு.
மானுட தாகத்தின் விடுதலைச் சரணாலயமே மைனாத் தீவு என்று நம்மால் உணர முடிகிறது, ஏதோ ஒரு நிமிடத்தில் ஒவ்வொரு மனிதனும் கனவு காணும்மைனாத் தீவை மாணிக் கண்டு பிடித்துக் கொடுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
‘பாவம், உணவின்மை, அடிமைத்தனம், சுரண்டல் இவற்றை எதிர்த்துப் போராடுவதே தருமம்’ என்ற புது விளக்கமும், ‘அரசியல் தலைவர்கள் மனிதர்களை முதலீடாக்கும் வியாபாரிகள்’ என்ற கணிப்பும், ‘நாம் பெண்களை வெற்றி கொள்கிறோம், அவர்களோடு இதயப் பரிமாற்றம் செய்து கொள்வதில்லை’ என்ற படப்பிடிப்பும் அவரது சிந்தனைகளில் சில.
மார்க்சியவாதியாக மலர்ந்து சமரசம் செய்து கொள்ளாத இலக்கியவாதியாக வாழ்ந்து, வறுமையின் பிடியில் வாடி, இறுதியில் மனநோய் மருத்துவமனையையும் எட்டிப் பார்த்து மரணத்தின் மடியில் மட்டுமே அமைதி பெற்ற மாணிக் இறக்கும்முன் இவ்வாறு எழுதினார்:
‘நான் மார்க்சியவாதி, அறிவியல்வாதி. எனக்கு எல்லாம் தெரியும். நான் மூட நம்பிக்கைகளை மதிப்பதில்லை. தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவதில்லை. நான் பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடும் போராளி. பொதுஉடமைவாதி. என் இதயம் கல்’!
புதுமையான முறையில் புத்ததேவ் பட்டாச்சார்யா தம் நிலத்து எழுத்தாளனை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். தமிழில் இதனை இதமாக மொழி பெயர்த்துள்ளவர் சு.கிருஷ்ணமூர்த்தி. இந் நூலில் மாணிக்கின் நாவல்களில் சிலவும் சிறுகதைகளில் சிலவும் சுருக்கமாகத் தரப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் படிக்கலாம். குறிப்பாக நாவல், சிறுகதை எழுத்தாளர்கள் படிக்க இதில் நிறைய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகரில் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு வரவேற்பு

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


