'சந்தியா': நல்ல சிநேகிதர்கள்! - தமயந்தி

பதினேழாவது வயதில் ’தாய்’ வார இதழில் பிரபஞ்சன் எழுதிய ’சந்தியா’ தொடரை வாசித்தேன். மனித சிநேகத்தை வாழ்வின் மிக முக்கியமான பிரதான அம்சமாகச் சந்தியா கருதுகிறாள்.
பிரபஞ்சன் எழுதிய 'சந்தியா' / எழுத்தாளர் தமயந்தி
பிரபஞ்சன் எழுதிய 'சந்தியா' / எழுத்தாளர் தமயந்தி
Updated on
2 min read

நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்களாயிருப்பது போலவே மோசமான புத்தகங்கள் விரோதிகளாக இருக்கின்றன. மதக்கோட்பாடுகளைக் கடந்து எழுத வந்த எனக்கு, அந்தப் பதினாறு, பதினேழு வயதில் புத்தகங்களைத் தேர்வு செய்வதில் பெரிய அக்கறையோ, கவனமோ இல்லை. வழிவந்த புத்தகங்களை எல்லாமே வாசித்தேன். வலுக்கட்டாயமான தீர்மானங்களையோ, மாற்றங்களையோ அவற்றில் பெரும்பாலானவை என்னில் ஏற்படுத்தினதில்லை. வாசித்த பல புத்தகங்கள் தற்போது நினைவிலுமில்லை.

ஒரு சிறுபிராயக் கனவில் என்னை நானே சிண்ட்ரலாவாக உருவகித்துக் கொண்டதுண்டு. செருப்புகள் அணியும் எல்லாத் தருணங்களிலும் இந்த சிண்ட்ரலா கனவு இப்போதும் தோன்றி மறைகிறது. பிளஸ் டூ படிக்கும் நேரம் ‘அட்வான்ஸ்டு இங்கிலீஷ்’ பாடம் தேர்வு செய்ததில் எனக்குக் கிடைத்த ஆருயிர் ஸ்நேகிதி எமிலி டிக்கின்ஸன்.  அவளை நான் அப்போதுதான் சந்தித்தேன். மரணத்தை நடுக்கமற்று எதிர்நோக்கும் அவளது மனநிலை எனக்குப் பிடித்திருந்தது. கடவுளை நோக்கி ‘Burglar, Banker என்று சுட்டு விரல் நீட்டும் அவளது விரல்களை நானும் பற்றிக்கொள்ளத் தோன்றிற்று. இன்றும் சில மரணங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் ஒரு பூச்சியின் ரீங்காரம் எனக்குள் ஒலிக்கிறது.

எனது பதினேழாவது வயதில் ’தாய்’ வார இதழில் பிரபஞ்சன் எழுதிய ’சந்தியா’ தொடரை வாசித்தேன். அதுவரை நான் வாசித்த பல தமிழ்ப் புதினங்களில், பெண்கள் திருமணமாகி கணவன்மார்கள் வேறு பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதைப் பொறுமையோடு சகித்து, அதைவிடவும் அழுது, தவமிருந்து, மனந்திருந்தி, வரும் கணவன்மார்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் பூர்ணத்துவம் பெறுவார்கள். முதன்முதலாகச் சந்தியா என்னிடம் சொன்னாள்:

’’கல்யாணப் பத்திரிகை எங்கள் வீட்டு ஆண்பிள்ளை பெயருக்குத் தான். சாப்பாடு முதலில் ஆண்களுக்கு. காலையில் முதல் குளியல் அவர்களுக்கு. பெண்கள் பெயரில் பெரும்பாலும் வங்கிக் கணக்கு இருக்கிறதா?

ஆண்களின் உலகம் வீடும், வெளியும். பெண்களின் உலகம் வீடு மட்டும்தான். இங்கு, ‘மாதராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்கிற பாடல் வேறு – அழும் குழந்தைக்குக் குச்சிமிட்டாய் மாதிரி’’

பதினேழு வயதின் சிக்கல்கள், பிரமைகளிலிருந்து என்னை மீட்டவள் சந்தியா. திருமணத்திற்கு முன்பும் பின்புமான வாழ்வில், தான் சார்ந்திருக்கும் ஆணின் முகத்தை அணிந்திருக்கும் அநேகப் பெண்களை நான் சந்தித்திருந்த வேளை அது. என் வாழ்வின் எல்லா நேரங்களிலும் என் முகத்தையே அணிந்திருக்க வேண்டுமெனச் சந்தியாவால் தீர்மானித்தேன். பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கோட்பாடல்ல. என் வாழ்வில் மிக நல்ல ஆண்களை நான் சந்தித்திருக்கிறேன். எனினும் எனக்கான ஸ்திதி, எனக்கான சுயம் எதையுமே எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ விட்டுக்கொடுக்க இயலாத மனப்பான்மை உருவானது அப்போதுதான்.

தமிழ்நாட்டின் ஆண் – பெண் சிநேகிதம் குறித்த குழப்பங்களைப் பற்றி அந்நாவலில் பிரபஞ்சன் பேசியிருப்பார். எவ்வளவு பெரியவர்களாகச் சமுதாயத்தில் நடமாடினாலும், ஓர் ஆணையும் பெண்ணையும் பற்றி அவர்களது சிநேகம் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசுபவர்கள் எனக்குச் செத்த எலி போல்தான். ஓர் ஆணும் ஆணும், பெண்ணும், பெண்ணும் சிநேகிப்பதைப் போல,  ஓர் ஆணும் பெண்ணும் சிநேகிக்க இயலும். அவ்வாறு இயலாதென வாதிட்டால், ஓர் ஆணும் ஆணுமாலும், ஒரு பெண்ணும் பெண்ணுமாலும் அது முடியாது. மனித சிநேகத்தை வாழ்வின் மிக முக்கியமான பிரதான அம்சமாகச் சந்தியா கருதுகிறாள்.

அசோகமித்திரனது, ஜி.நாகராஜனது, எஸ்.சம்பத்தினது படைப்புகள், அவை சார்ந்த மனப் பின்னல்கள் எனக்குள் அலைக்கழிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. எனினும் வாழ்வின் பிரதானப் பகுதிகளில் தெளிவையும், தைரியத்தையும் சந்தியா எனக்குள் தந்தாள் என்றால் மிகையல்ல. என்னைச் செதுக்கியவர்களில் அவள் முதன்மையானவள்.

வாசிக்கப்படாத ஒரு புத்தகத்தை என்னால் இன்றும் கடந்து போக இயலாது. தவறான செயல்பாடுகளை எதிர்த்து விரல் நீட்டும் தைரியத்தைப் புத்தகங்களிடமிருந்துதான் பெற்றேன். பல சமயங்களில் சந்திக்க நேர்ந்த இன்னல்களை, துயரங்களை, துரோகங்களை, துவேஷ வார்த்தைகளை எதிர்கொள்ளவும், அவற்றிலிருந்து மீளவும் புத்தகங்களே உதவியிருக்கின்றன. அவை நல்ல சிநேகிதர்கள். பொதுவாகவே, நல்ல புத்தகங்கள் சில மனிதர்களை விடவும் அற்புதமானவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com