எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்! கவிஞர் ஜெயபாஸ்கரன்

எண்ணுவதை எல்லாம் இரவு பகலாக அமர்ந்து எழுதிக் குவித்துவிடுவது எழுத்தாகாது.
எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்! கவிஞர் ஜெயபாஸ்கரன்
Updated on
1 min read

எண்ணுவதை எல்லாம் இரவு பகலாக அமர்ந்து எழுதிக் குவித்துவிடுவது எழுத்தாகாது. யாரும் படிக்காத நிலையில் நூறு புத்தகங்களை எழுதுவதால் இச்சமூகத்துக்கு என்ன பயன்? எழுத்தாளர் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுவோரின் எழுத்துகளில் ஓர் அறம் இருக்க வேண்டும். அப்பழுக்கற்ற சமூக அக்கறை, எழுத எடுத்துக் கொண்ட கருப்பொருளை முன்வைத்த ஒரு தர்க்கம், மொழி நடையில் தரம் இருக்க வேண்டும்.

"எழுத்து எனக்குச் சோறு போடவில்லை. எனக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. எனக்கு அங்கீகாரம் இல்லை' என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரற்றுகிற மனப்பான்மை எழுத்து அறத்துக்கு எதிரானது. எழுதுகிறவர்கள் விருதுகளை நோக்கி விரைவதும், அதற்காக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி வியர்வையைத் துடைத்துக் கொள்வதும் வேதனையாக உள்ளது.

இந்திய மதிப்பில் சற்றேறக்குறைய 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நோபல் விருதுகளைக் கூட சிலர் மறுத்திருக்கிறார்கள். அதற்கு அந்த எழுத்தாளர்கள் கூறிய காரணங்கள், ஓர் எழுத்தாளன் என்கிற வீரியமான, கம்பீரமான, மானுட மாண்புகள் நிறந்த அறவுணர்வுடன் வெளிப்பட்டவையாக உள்ளன.

எழுத்தாளர்கள் சமூகத்தின் நீதிபதிகள். அவர்கள் சரியாக எழுதினால், அது சமூகத்துக்கான தீர்ப்பாக இருக்கும். யாருமே பார்க்க வாய்ப்பில்லாத, எங்கோ இருக்கின்ற, ஆதரவற்ற ஒரு பொருளின் மீது சூரிய ஒளி படர்வது போல எழுத்தாளரின் பார்வை இருக்க வேண்டும் என்கிறார் உலகப் புகழ் பெற்ற கவிஞன் வால்ட் விட்மன். எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்கிறார் மகாகவி பாரதி. அந்த இரு தெய்வங்களையும் அறிவுச்சுரபியாக மாற்றி, அதிலிருந்து சமூகத்துக்கு அள்ளிக் கொடுக்கலாம். ஆனால், அதை யாசகப் பாத்திரமாக்கி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிடக் கூடாது. ஓர் எழுத்தாளன் உண்மையாகவே எழுதுகிறான் என்றால், அவனைச் சமூகம் தனது கைகளில் ஏந்திக் கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com