பேரரசி: நாவலைப் போல வரலாறு!

ராணி மகா ராணியாக வாழ்ந்து மறைந்த இணையற்ற பெண்மணியான எலிசபெத்தின் கதைதான் இந்தப் பேரரசி.
பேரரசி!
பேரரசி!

நூல் அறிமுகம்

வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நாட்டிலும் எண்ணற்ற ராணிகள். எத்தனையோ ராணிகளைப் பற்றிப் படித்திருந்தாலும் கேள்விப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதுமே ராணி என்றதுமே நினைவுக்கு வருவது இரண்டு பெயர்கள்தான், பிரிட்டிஷ் அரசிகள், ஒருவர் எப்போதோ மறைந்த விக்டோரியா மகாராணி, இன்னொருவர் நம்முடைய காலத்திலும் வாழ்ந்து அண்மையில் மறைந்த எலிசபெத் ராணி.

ராணி மகா ராணியாக வாழ்ந்து மறைந்த இணையற்ற பெண்மணியான எலிசபெத்தின் கதைதான் இந்தப் பேரரசி.

வரலாறுகள் இருக்கின்றன, நாவல்கள் இருக்கின்றன, வரலாற்று நாவல்களும் இருக்கின்றன. ஆனால், இந்த நூலிலோ ஒரு வரலாறே நாவலாக உருப்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த சில மாதங்களிலேயே அவருடைய முழுமையான வரலாற்றை விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார் நூலாசிரியரான மோகன ரூபன்.

நூறாண்டுகளுக்குச் சில ஆண்டுகள் மட்டுமே குறைவான வாழ்க்கையை வாழ்ந்து,  மறைந்தவர் ராணி எலிசபெத். ராணி எலிசபெத்தின் வாழ்க்கை வரலாறு என்பது தனியொரு பெண்மணியின் வரலாறு மட்டுமல்ல, நூறாண்டு கால பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வரலாறு, நூறாண்டு கால பிரிட்டன் வரலாறு மட்டுமல்ல, நூறாண்டு கால உலக வரலாறும்கூட.

குட்டி இளவரசி எலிசபெத் பிறப்பிலிருந்து தொடங்குகிறது இந்த நூல். சிறு பெண்ணாக இருந்தபோது கார்கி நாயொன்றைப் பரிசளிக்கிறார் தந்தை ஆல்பர்ட். தன் வாழ்நாள் முழுவதும் இதே வகை நாய்களை பிரியமாக வளர்த்துவருகிறார் ராணி.

அரியணை வாரிசாக எலிசபெத் எவ்வாறு மாறுகிறார் என்பதைப் பற்றிய கதையே சுவாரசியமாகச் செல்கிறது. இந்தக் கதைக்குள்தான் காதலுக்காக முடிதுறந்த மன்னன் (எட்டாம் எட்வர்ட்) கதையும் வருகிறது. இளவரசி எலிசபெத்தின் காதலும்கூட சுவாரசியமானதுதான். பிலிப் கோமகனுடன் அவர் காதலை வளர்ப்பதும் கரம் பிடிப்பதில் காட்டும் உறுதியும்கூட அவரைப் பற்றிய சித்திரத்தை வலுப்படுத்துகிறது.   

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் செயல்பாடுகள் யாவும் மெச்சத்தக்கதாக இருக்கின்றன என்றால், இளவரசியின் செயல்பாடுகளோ எதிர்காலத்தில் அவர் எத்தகைய பேரரசியாகத் திகழவிருக்கிறார் என்பதை முன்னறிவிக்கின்றன.

இந்தப் போர்க் காலத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் துணிந்து படைப் பிரிவில் இணைந்து பணியாற்றிய முதல் பெண் இவர்தான். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக, மெக்கானிக்காக இந்தக் காலத்தில் அவர் பெற்ற பயிற்சி காரணமாக, எதிர்காலத்தில் அவருடைய டிரைவிங்கைப் பார்த்து அயல்நாட்டுத் தலைவர்களே அசந்துபோகிறார்கள்.  

மிகவும் இளைய வயதிலேயே அரசியாக அவர் பொறுப்பேற்க நேர்ந்ததும், பொறுப்பேற்ற சூழல் அவரை எவ்வாறு வளர்த்தெடுத்தது என்பதும் அவரைச் சுற்றி நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றில் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் ராணி எலிசபெத்தின் ஆளுமை மட்டுமல்ல, அபரிமிதமான அவருடைய நகைச்சுவை உணர்வும்கூட வெளிப்படுகிறது.

வீட்டுக்கு வீடு வாசல்படிபோல, சூரியனே மறையாத சாம்ராஜ்யமாக இருந்த அரசியின் அரண்மனையிலும் எத்தனையோ. குடும்பத்துக்குள் அத்தனை காதல்கள், விருப்பங்கள், வெறுப்புகள். அவற்றைச் சுற்றி நடைபெறும் மோதல்கள். எல்லாவற்றையும் மிகச் சிறப்பாகவும் பொறுமையாகவும் கையாள்கிறார் ராணி எலிசபெத்.

மறைந்த இளவரசி டயானா விஷயத்தில் இன்னமும் பலருக்கு ராணி எலிசபெத் மீது கோபம் இருந்தாலும், மருமகள் டயானா விஷயத்தில் மாமியாராகவும் அரசியாகவும் அவர் எந்த அளவுக்குப் பெருந்தன்மையுடனும் நிதானமாகவும் நடந்துகொண்டிருக்கிறார் என்பதை நூலில் மிகச் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். டயானாவின் தரப்பு நியாயங்களும் நூலில் பேசப்படுகின்றன.

டயானா மரணத்தின்போது, எத்தகைய சூழ்நிலையில் ஊடகங்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக ராணியின் மீதும் அரச குடும்பத்தின் மீதும் மக்கள் கோபத்தைத் திருப்பிவிட்டன என்பதைப் பற்றித் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் மோகன ரூபன்.

எத்தகைய பெருந்திரளாக இருந்தாலும் எத்தகைய சூழலாக இருந்தாலும் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பது போன்ற ராணியின் தனிச் சிறப்பு மிக்க குணங்கள், ஆடை, அணிகலன் பழக்கவழக்கங்கள், ஒவ்வொரு பிரதமருடனும், அவரைவிட மூத்தவரில் இருந்து இளம்வயதினர் வயதினர் வரை, அவருடைய உறவு, வின்ஸ்டன் சர்ச்சிலுடனான நல்லிணக்கம், ராணியாகவே இருந்தாலும் ஏழை எளிய மக்களுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவு என ஒவ்வொன்றுமே மேலும் விரித்தெழுதக் கூடிய அளவிலான தனித்தனிக்  கதைகள்.

நூல் என்னவோ ராணி எலிசபெத் பற்றியதுதான் என்றாலும் அவரைச் சுற்றியிருந்த அனைத்து உறவுகள் பற்றியுமான விஷயங்களும் நூலில் இடம் பெறுகின்றன. மருமகளாகத் தன் மாமியாரிடம் அவர் நடந்துகொண்ட விதம் வியப்பூட்டுகிறது. நூலில் சின்னச் சின்ன விஷயங்கள்கூட மிகச் சிறப்பாக, எடுத்துக்காட்டாக, எலிசபெத்தின் திருமண ஏற்பாடுகள், முடிசூட்டு விழா, விவரிக்கப்படுகின்றன.   

பதவியேற்புக்கு முன்னரும் பின்னரும் உலகம் முழுக்கச் சுற்றிவருகிறார் ராணி எலிசபெத். ஒவ்வொரு பயணத்தின்போது அந்தந்த நாட்டை, அரசியலைப் பற்றிய தகவல்களுடன் அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கிருந்த உறவும் அணுகுமுறையும்கூட சிறப்பாக விவரிக்கப்படுகிறது.

ராணி எலிசபெத்தின் முழுமையான வரலாற்றை நல்ல தமிழில் விறுவிறுப்பாகத் தந்திருக்கும் மோகன ரூபன், ஏற்கெனவே பிணந்தின்னிக் கழுகு, திமிங்கில வேட்டை (மோபிடிக்) போன்ற நூல்களை எழுதியவர்.

எலிசபெத் மகாராணியின் எதிர்பாராத மறைவைத் தொடர்ந்து, மிகக் குறுகிய கால இடைவெளியில், அவரின் வரலாற்றை ஒரு பெரு நூலாகக் கொண்டுவந்துள்ளனர். சற்றே சறுக்கினாலும் சலிப்பூட்டிவிடக் கூடிய வரலாற்று விஷயத்தைத் தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக ஒரு நாவலைப் போல விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்கள்.

இந்தப் புத்தகக் காட்சியின் வரவுகளில் குறிப்பிடும்படியான ஒரு நூல் பேரரசி.

பேரரசி - மோகன ரூபன், பக்கம் - 456, விலை - ரூ. 500, அபிநயா பிரசுரம் (கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்), 5, முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600 017, செல்: 97910 71218

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com