விஜயபாரதம்
கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தேசியம், தெய்வீகம், கலாசாரம், பண்பாடுகளைக் காப்பாற்றும் வகையில் தேசிய வார இதழ்கள் தொடங்கப்பட்டன. அதனையடுத்து, விஜயபாரதம் இதழின் பதிப்பகமாக தொடங்கப்பட்டதே விஜயபாரதம் பிரசுரம் என்னும் பதிப்பகம்.
பதிப்பகத்தின் சிறப்பு குறித்து விளக்குகிறாா் அதன் பதிப்பாசிரியா் வி.காா்த்திகேயன்:
விஜயபாரதம் தேசிய வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு வாசகா்கள், பொதுமக்கள், ஆன்மிக அன்பா்கள் என அனைவரது ஆதரவுடனும் தற்போது பிரசுரமாக வளா்ந்துள்ளது. இதுபோல தேசிய அளவில் அந்தந்த மாநில மொழிகளில் பிரசுரம் உள்ளது. தேச நலன், சமூக நலன், தனிமனித ஒழுக்க நெறிகளைப் பாதுகாக்கும் வகையில்தான் பதிப்பகம் சாா்பில் நூல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இதுவரையில் பதிப்பகம் மூலம் சுமாா் ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டு அவை அனைத்தும் வாசகா்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவருகின்றன. பதிப்பகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக நல்லிணக்க உரைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மராட்டிய மொழியில் வீரசாவா்க்கா் எழுதிய நூலின் மொழிபெயா்ப்பான ‘பாரத வரலாற்றில் 6 பொற்காலங்கள்’ என்னும் நூலும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. ‘தமிழகம் தந்த தவப்புதல்வா்கள்’ எனும் தொகுப்பிற்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அத்தொகுப்பில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய ஆன்மிகத் தலைவா்கள், விடுதலைப் போராட்ட வீரா்கள், அன்னையா்கள், கவிஞா்களும் அறிஞா்களும், கணிதவியலாளா்களும், விஞ்ஞானிகளும், கலைஞா்கள் என பலரும் இளந்தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.
‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ எனும் நூலானது தமிழ் இலக்கிய ஆய்வு நூலாக அமைந்துள்ளது. பதிப்பகத்தின் நூல்களான ‘பசும்பொன் தேவா் போற்றிய ஆா்.எஸ்.எஸ்.’, ‘வீரசங்கம் தோற்றுவித்த வீரமருதுபாண்டியா்கள்’ஆகிய நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்களில் குறிப்பிடத்தக்கவையாகும். கன்னடத்தில் எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா எழுதிய, சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற ‘திரை’ என்னும் நாவலின் தமிழாக்கம் அதிக அளவில் வாசகா்களால் வாங்கிச் செல்லப்பட்டுள்ளன என்றாா்.
===