85-வது வயதில் ரத்தன் டாடா! வாழ்க்கை என்ன சொல்கிறது?

உங்கள் வாழ்வில் எடுத்த முடிவுகளிலேயே சிறந்த முடிவு எது? எனக் கேட்டால் தயங்காமல் அமெரிக்காவில் இருந்து இந்தியா வர முடிவு செய்ததுதான் என்கிறார்.
85-வது வயதில் ரத்தன் டாடா! வாழ்க்கை என்ன சொல்கிறது?

வாழ்க்கையில் எந்தத் துறையில் முட்டி மோதினாலும் சிலருக்கு மட்டுமே அதில் வெற்றிக்கான கதவு திறக்கிறது. திறந்து உள்ளே சென்று இலக்கை அடைந்து விட்டேன் என சும்மா இருப்பவன் உண்மையில் வெற்றியாளன் இல்லை. தொடர்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். நிறையோ ,குறையோ அதை கணக்கில் வைக்காமல் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரத்தன் நாவல் டாடா ஒரு உதாரணம்.

இந்தியாவில் பெரிய தொழிற்புரட்சிகளை ஏற்படுத்தி மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கியவர் ரத்தன் டாடா. பிறப்பிலேயே செல்வந்தராக இருந்தாலும் அவரின் அசாத்தியமான முயற்சிகள், திட்டமிடல்கள் இன்றும் பல தொழில் முனைவோர்களுக்கு உதாரணமாக இருக்கிறது.

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்ததும் பல இந்தியவர்களின் கனவு நிறுவனமான ‘ஐபிஎம்’-இல் ரத்தன் டாடாவிற்கு வேலை கிடைத்தபோது அதை வேண்டாம் என உதறி இந்தியா வந்தார். இன்றும் அவரிடம் உங்கள் வாழ்வில் எடுத்த முடிவுகளிலேயே சிறந்த முடிவு எது? எனக் கேட்டால் தயங்காமல் அமெரிக்காவில் இருந்து இந்தியா வர முடிவு செய்ததுதான் என்கிறார்.

கோடியில் புரளும் அளவிற்கு சொத்துகள் இருந்தாலும் ரத்தனின் வருகை எந்த விதத்திலும் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்று.எந்த விதமான கனவுகளும் தனக்கில்லை என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த நாட்டின் வளர்ச்சியை மாற்றியமைக்க வேண்டும் என்கிற மன உந்துதலில் டாடா தயாரிப்பில் பலவற்றை உருவாக்குகிறார். பெரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி பல இளைஞர்களின் கனவுகளுக்கு செயல் கொடுக்கத் தொடங்கினார்.

ஒரு கார் பயணம் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்த நிலையில் ‘டாடா நானோ’ மூலம் அதை சாமானியக் கைகளுக்கு கொண்டுவந்ததில் ரத்தனின் பங்கு முக்கியமானது. இன்று வரை நானோ வந்ததற்கான நோக்கம் அது எளிய ஓட்டு வீட்டு வாசலில் கூட நிற்க வேண்டும் என்பதுதான். 

அவற்றைவிட, ஒரு முதலாளியாக ரத்தன் டாடா நடந்து கொண்டிருக்கும் விதம் தான் அவரை தேர்ந்த ஆளுமையாக மாற்றியிருக்கிறது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டாடா கன்சல்டிங் சர்வீஸ் போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தவறாமல் ஊதியம் என்பதைத் தாண்டி இன்றுவரை வேலைநீக்கம் என்பதே டாடாவின் வரலாற்றில் இல்லை. 

சமீபத்தில் கரோனாவால் இறந்த டாடா ஊழியர்களுக்கு பெரிய நஷ்ட ஈட்டுத்தொகையையும் , குடும்பத்தினருக்கு மாதம் தவறாமல் உதவித்தொகையும் வழங்குவதாக அறிவித்தது, கடந்த  ஆண்டு தன் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியரை பூனேவில் உள்ள அவரின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தது என தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தாலும் இன்று வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் ரத்தனுக்கு இடம் இல்லை. காரணம், தான் சம்பாதித்தியத்தில் 60 சதவீத்திற்கும் மேல் கல்லூரிகள், பள்ளிகள் , புதிய முயற்சிகள் என பலவற்றிருக்கும் நன்கொடையாக உலகம் முழுவதும் வழங்கிவருகிறார். 

இப்போது காலம் ரத்தன் டாடாவை முதுமையில் தள்ளியிருக்கிறது. ஆனாலும் தள்ளாடியபடி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிவுரைகளையும் , ஆலோசனைகளையும் வழங்கி வருபவரிடம் வாழ்க்கையில் சோர்வே கிடையாதா? எனக் கேட்டால் ‘எனக்கு பறக்க முடியாத நாளே மோசமான நாள்’ ‘இரும்பை துருவைத் தவிர வேறு எதனாலும் அழிக்க முடியாது.அதே போல் மனிதனுக்கு அவனுடைய மனநிலைகள். அது சரியாக இருக்க வேண்டும்’ ‘சரியான முடிவாக இருக்குமா என யோசிக்காதீர்கள், முடிவை எடுத்துவிட்டு அதை சரியானதாக மாற்றுங்கள்’ என்பதை வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டிய ரத்தன் டாடா இன்று 85-வது வயதில் ‘மெல்ல’ அடியெடுத்து வைத்திருக்கிறார்.

முன்னாள் ஊழியரின் வீட்டில் ரத்தன் டாட்டா
முன்னாள் ஊழியரின் வீட்டில் ரத்தன் டாட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com