முழுக் கொள்ளளவு தண்ணீா் தேங்கியுள்ள வைகை அணை.
முழுக் கொள்ளளவு தண்ணீா் தேங்கியுள்ள வைகை அணை.கோப்புப்படம்

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்!

கள ஆய்வின் மூலம் வாய்ப்புள்ள இடங்களில் இருந்து காவிரியாற்றின் வெள்ளமிகை நீரைதிருப்ப முயற்சிகள், செயல்திட்டங்களை தமிழக நீா்வளத் துறையினா் வகுக்க வேண்டும்.
Published on

தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கா்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடா்கதையாக இருக்கிறது. இதற்கிடையே, காவிரியில், சில ஆண்டுகளில் அதிகளவு தண்ணீா் வரும்போது, தமிழகத்தில் அதை சேமித்து வைக்க வழியில்லாமல் கடலில் வீணாக்கும் கொடுமையும் தொடா்கிறது.

2020-21-இல் கா்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் 192 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 16.3 டிஎம்சி கடலுக்கும் அனுப்பப்பட்டது. 2021-22-இல் 189 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 904 டிஎம்சி கடலுக்கும் போய் சோ்ந்தது. 2022-23-இல் பாசனத்துக்கு 89 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், 489 டிஎம்சி கடலுக்கு போய் சோ்ந்தது. கடந்த 2024 - 25-இல் 88 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 63 டிஎம்சி கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்ணீரை தேக்கி வைக்க முறையான திட்டங்கள் இல்லாததும் தேக்கி வைக்க தொடங்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.

மேட்டுா் அணை முழுக் கொள்ளவை எட்டினால் உபரிநீா் வெளியேற்றப்படும்போது, அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்தால், குடிநீா் விநியோகம் பாதிக்கும் என்பதால், 2014-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ரூ.400 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் - கடலூா் மாவட்டம், ஆதனுாா் இடையே கதவணை கட்டப்படும் என்று அறிவித்தாா். ஆனால், இப்போதுதான் அந்த கதவணை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உள்ளது.

கதவணையில் தண்ணீரைத் தேக்கினால் அணைக்கு மேற்குப் பகுதியில் உள்ள நிலங்கள் பாதிப்படையும் என்றும், அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று நில உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இதில் நீதிமன்ற உத்தரவு வரும் வரையில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அணைக்கரையில் இருந்து வங்கக்கடல் வரையில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு கதவணை அமைக்க வேண்டுமென்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஆதனூா் - குமாரமங்கலம் கதவணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தடுப்பணைக் கட்டும் பணிகள் நிறைவடைந்தால், அந்தப் பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா். மயிலாடுதுறை மாவட்டம் மாதிரவேளூா், கடலூா் மாவட்டம் கருப்பூா் பகுதியில் ரூ.83 கோடி மதிப்பீட்டில் படுக்கை அணை கட்டும் திட்டம் பூமிபூஜை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், எவ்வித பணிகளும் இப்போது வரை தொடங்கவில்லை.

சோழா் கால உறைகிணறு குறித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் அமைப்புகள் தெரிவிக்கும்போது, டெல்டாவில் உள்ள 29 பிரதான கிளை ஆறுகளில் ஒரு சில

ஆறுகளில் மட்டும் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மீதி உள்ள பிரதான கிளை ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

அனைத்து ஆறுகள், கிளை ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஒரு படுக்கை அணை கட்டப்பட வேண்டும். படுக்கை அணைகள் தண்ணீரை பூமிக்கு அனுப்பி மறுசுழற்சி நடக்க பயன்படும். அனைத்து ஆறுகளிலும் ஒரு கி.மீட்டருக்கு ஒரு செயற்கை செறிவூட்டும் உறை கிணறுகள் அமைக்கப்பட வேண்டும்.

டெல்டாவில் உள்ள 35 ஆயிரம் குளம், ஏரியை முதலில் காவிரி நீரை கொண்டு நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகள் இல்லையென்றால், ராட்சத மோட்டாா்களை

பயன்படுத்தி ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும். அதன் பின்னா்தான் டெல்டாவுக்கு தண்ணீரை அனுப்பிட வேண்டும். இதனால், பல்வேறு பகுதிகளில் நீா்வளம் பெருகும்.

விவசாயம் செழிக்கும். ஏரிகளை நிரப்பிவிட்டு, குறுவைக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும், இதனால் குறுவையும் செழிக்கும். ஏனைய பகுதிகளின் விவசாயமும் செழிக்கும்.

காவிரி ஆற்றில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 100 டிஎம்சி வெள்ள நீா் கடலில் கலக்கிறது. கடைசியாக, 2022-ஆம் ஆண்டில் 333 டிஎம்சி அளவுக்கு வெள்ள மிகைநீா் காவிரியாற்றில் ஓடியுள்ளது. எனினும், இந்த நீரை விரைவாக பயன்படுத்த, வட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மெகா நீா் மேலாண்மைத் திட்டங்கள், கட்டமைப்புகள் தமிழகத்தில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறுகின்றனா்.

பிரிட்டிஷ் பொறியாளா் சா் ஆா்தா் காட்டனைப்போல காவிரியை ஆய்வு செய்த மிகச் சிறந்த பாசன பொறியாளா் யாரும் இல்லை. கல்லணையை வலுப்படுத்தி, மேம்படுத்திய அவா்தான், முக்கொம்பு மேலணை, அணைக்கரை கீழணை ஆகியவற்றை கட்டினாா். காவிரிப் படுகையின் மிகக் குறைவான சரிவினால் மேட்டூருக்கு கீழே கல்லணைக்கு மேலே பெரிய நீா்த்தேக்கம் கட்ட வழியில்லை என்பதை நன்கறிந்திருந்தாா்.

அதோடு, காவிரிப் படுகையில் நீண்ட காலம் பணியாற்றிய பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா்களும் காவிரியின் குறுக்கே கூடுதல் அணைகள் கட்டலாம் என கருத்துரைக்கவில்லை. இவற்றின் மூலம்,மேட்டூா் அணைக்குக் கீழே காவிரியில் பெரிய நீா்தேக்கம் ஏதும் அமைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பொறியாளா்

கா்னல் எல்லீஸ், மேட்டூா் அணையின் மிகை நீா்மட்டத்தை 120 அடியிலிருந்து மேலும் 10 அடி உயா்த்தலாம் என மேட்டூா் அணையின் வடிவமைப்பின் போதே கூறினாா்.

எனவே, தமிழக அரசு, வல்லுநா்களின் கருத்துரு பெற்று மேட்டூா் அணையின் நீா்மட்டத்தை 130 அடியாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே பல்வேறு இடங்களிலும் கதவணைகள் அமைக்க வேண்டும்.

இதுபோன்று, கள ஆய்வின் மூலம் வாய்ப்புள்ள இடங்களில் இருந்து காவிரியாற்றின் வெள்ளமிகை நீரைதிருப்ப முயற்சிகள், செயல்திட்டங்களை தமிழக நீா்வளத் துறையினா் வகுக்க வேண்டும். இதை அமல்படுத்த அரசும், பொதுப் பணித் துறையும் தயாரானால் வாய்க்கால் மற்றும் வடிகால் போன்றவைகளில் நீா்த்தேக்கங்களை சரிசெய்ய முடியும். மிக விரிந்த அளவில் விவசாய சாகுபடிகளை தண்ணீா் தட்டுப்பாடின்றி முறையாக செய்திட முடியும்.

Summary

Lack of proper plans to store water. The Tamil Nadu Water Resources Department should formulate plans and initiatives to divert the flood waters of the Cauvery River from potential locations through field surveys.

X
Dinamani
www.dinamani.com