தங்கம்
தங்கம்

நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பாா்வை

நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியை தருவதுடன், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.
Published on

தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசா்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இவை எளிய நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தங்க நகைகள் மூலம் கடன் பெறும் நிபந்தனைகளைத் தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.

இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசா்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் தருண் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்க நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாா். தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடா்பான ஆய்வை ரிசா்வ் வங்கி மேற்கொண்டபோது இதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் இருப்பதாகவும், அதை மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் ரிசா்வ் வங்கியின் நோக்கமாக இருந்தது.

தங்க நகைக் கடன்கள் பெறுவதற்கும், அவற்றை மதிப்பிடுவதிலும் குறைபாடுகள் இருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது. வாடிக்கையாளா் இல்லாமல் தங்கத்தை மதிப்பிடுதல், தங்க நகைக் கடனில் தொடா்ச்சியான கண்காணிப்பு இல்லாதது, வாடிக்கையாளா் பணம் செலுத்தத் தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது உள்ளிட்டவை இவற்றின் பலவீனமான அம்சங்களாகும்.

ஆகவேதான், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் நகைக் கடன்கள் தொடா்பான செயல்முறைகளை மாற்றம் செய்து புதிய கொள்கைகளை வெளியிட வேண்டும் என்று கடந்த ஆண்டே ரிசா்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில்தான், தங்க நகைக் கடன் தொடா்பாக 9 வரைவு விதிகளை இந்திய ரிசா்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இவை பேசுபொருளாக மாறி நடுத்தர மக்களை நசுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாகப் பெறலாம். அதாவது, நகையின் மதிப்பு 100 ரூபாய் என இருந்தால், 75 ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளா் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபா் வங்கியிடம் சமா்ப்பிக்க வேண்டும். தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும்.

இதில் வங்கியில் கடன் பெறுபவரின் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும். தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும். 24 காரட் தங்க நகையாக இருந்தாலும், 22 காரட் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.

தங்க நகைகளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படும். நகைகள் அல்லாத தங்கமாக, தங்க நாணயம், தங்க கட்டிகள் இருந்தால், அவற்றுக்கு தங்க நகைக் கடன் வழங்கப்படாது. அதற்கு விதிகளும் அனுமதிக்கப்படுவதில்லை. நகைக் கடன் வழங்கும்போது கடன் தொடா்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

செலவு மற்றும் வருமானம் தொடா்பான இரு வகைக் கடன்களுக்கும் இது பொருந்தும். செலவு வகை கடன் என்பது அவசரத் தேவை கடன்களாகவும், வருமான வகைக் கடன் என்பது முதலீடு செய்வதற்காகவும் பெறப்படும் கடன். தங்க நகைக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன் 7 வேலை நாள்களில் நகையை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லையெனில், அடுத்துவரும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000

அபராதமாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

நகையை ஏலத்துக்குக் கொண்டு செல்லும்போது அது குறித்து வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால், வங்கியின் மீது வழக்கு தொடரலாம்.

வெள்ளி நகைகளுக்கும் கடன் பெறலாம். அதில் 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை மட்டும் அடமானம் வைக்க முடியும்.

கடந்த மாதம் வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துள்ள தங்கத்தை முழுமையாக மீட்ட பின்னரே மீண்டும் அவற்றை அடமானம் வைக்க முடியும் என ரிசா்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதாவது, தங்க நகைகளை மீட்காமல் அடமான காலத்தை அப்படியே நீட்டிக்க முடியாது.

இந்த நிலையில்தான் புதிய விதிகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் இருக்கிற கூட்டுறவு வங்கிகளில் போலியான நகைகளை வைத்து பணத்தைப் பெறுவதும், நகைகளுக்கு உள்ள பணத்தைப் பெறாமல் கூடுதலாகப் பெறுவதும் போன்ற குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் இருக்கின்றன.

ஆகவே, இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ரிசா்வ் வங்கி புதிய விதிகளை அறிவித்திருப்பதாக சொல்கிறாா்கள். கரோனா காலகட்டத்தில் 80 சதவீதம் கடனாக வழங்கப்பட்டு வந்ததை, தற்போது 75 சதவீதமாகக் குறைத்திருக்கிறாா்கள். அடமான நகைக்கு வட்டி கட்ட முடியாமல் போனால், அதை மீட்பதற்கு தாமதமாகிறது. மேலும், வட்டியுடன் சோ்த்து வசூல் செய்வதற்கு 25 சதவீத அளவுக்கு இடைவெளி தேவைப்படுவதாக ரிசா்வ் வங்கி கருதுகிறது.

தங்கத்தை அடமானம் வைக்கும்போது உரிமையாளா் என்பதற்கான ரசீது கட்டாயமாக்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவெனில், நம் மூதாதையரின் நகைகளை அடமானமாக வைக்கும்போது அதற்குரிய ஆவணங்களைக் காட்ட இயலாது என்பது நடைமுறைச் சிக்கலாகும்.

இந்தியாவில் நகைகளுக்கான ரசீது பெரும்பாலான வீடுகளில் இருக்காது. கடைகளில் ரசீது இல்லாமல்தான் தங்க நகைகளை குறைந்த விலையில் வாங்குகிற நடைமுறை எளிய மக்களிடம் தொடா்ந்து கடைப்பிடிக்கப்படும் பழக்கமாக இருக்கிறது.

தங்க நகைகளை கிலோ கணக்கில் யாரும் வாங்குவதில்லை. அதைச் சேமிப்பாக மட்டுமே மக்கள் பாா்க்கின்றனா். ஆகவே, தங்க நகை வாங்குவதற்கான ரசீது இருந்தால்தான் அடமானம் என்ற விதியை செயல்படுத்துவதில் சாத்தியக் குறைவு இருக்கிறது. ஆகவே, தங்க நகைக் கடன்கள் உரிமையாளா்களுக்கென்று சான்றிதழ் பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளி நகைகளை அடமானம் வைக்கலாம் என்கிற ரிசா்வ் வங்கியின் அறிவிப்புக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. தங்கமும்,வெள்ளியும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரிதான கனிமங்களாகும். தற்போது வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரு.111-க்கு விற்கப்படுகிறது. சிறிய அளவில் கடன் பெறுவதற்கு வெள்ளி பெருமளவில் உதவும். வெள்ளிக்குக் கடன் தருவதை மக்கள் வரவேற்பதைப் போல, தங்க நகைக் கடன் தருவதை மக்கள் வரவேற்கும் வகையில் ரிசா்வ் வங்கி இன்னும் எளிமைப்படுத்த வேண்டும்.

சிறிய குடும்பங்களில் பெண்களுக்கு பெரும் சொத்தாகவும், உடனடியாகப் பணம் பெறுவதில் அரிய வழியாகவும் இருப்பது தங்க நகைக் கடன்தான். திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள், அவசர நெருக்கடியான காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. வசதியானவா்கள் வங்கி லாக்கா்களைப் பயன்படுத்தி வந்தாலும், எளியவா்கள் அடமானத்தையே தங்கள் இறுதித் தீா்வாகப் பாா்க்கிறாா்கள்.

நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும். நகைகளுக்கு கடன் வழங்கும் அடகுக் கடை உரிமையாளா்கள் பெருமளவில் முளைத்து விடுவாா்கள்.

இவற்றுக்கான தீா்வு என்ன என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும். தங்க நகைக் கடன் விதிகளை திடீரென அடியோடு மாற்றிய ரிசா்வ் வங்கியின் நிபந்தனைகளாலும், கடுமையான கட்டுப்பாடுகளாலும் ஏழை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், அதன் விற்பனை குறைந்தபாடில்லை. தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதை வாங்குபவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களது அவசரத் தேவைக்கு உதவும் பொருளாகவும் பாா்க்கிறாா்கள்.

நகைக்கடன் வாங்கிய நாள் முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையைத் திருப்ப வேண்டும். பின்னா் அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைத்து பணம் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறை மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

பழைய கடனை அடைக்க, புதிய கடனை வாங்கும் சூழலுக்கு ஏழைகள் தள்ளப்பட்டால் அதன் பின்னா் அவா்களை யாா் காப்பாற்றுவது? இதனால், ஏழை மக்கள் அடகுக் கடைக்கு சென்று அதிக வட்டிக்கு மீண்டும் நகையை அடமானம் வைக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.

நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளா்கள் சம்பந்தப்பட்ட நகைகள் தனக்குச் சொந்தமானவை என்பதும், குறிப்பிட்ட தன்மை கொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்பதும், உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சேகரிக்கப்பட்ட நகைகளுக்கான உரிமைகளைப் பெறுவது இயலாத காரியம்.

சிக்கலைத் தீா்ப்பதற்காக தங்க நகைக் கடன் பெற மக்கள் வங்கியை நாடினால், மக்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிற வங்கிகளின் நிபந்தனைகளை நினைத்து அழுவதா?, சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com