

இந்தியா ஒரு விவசாய நாடு; கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவர்கள் தங்களுக்காக வாழவில்லை; அனைத்து மக்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால், அந்த விவசாயமும் விவசாயிகளும் படும்பாடு என்னென்பது? மிகப் பெரிய அரசு நிர்வாகம் இருந்தும், அதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்க முடியவில்லை.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 10,000 முதல் 20,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றன. நெல்லை அறுவடை செய்து எடுத்தபிறகு நெல் கொள்முதலுக்காக நீண்ட காத்திருப்பில் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல்மணிகள் அழிந்து போவதற்கு யார் பொறுப்பு? அல்லது யார் காரணம்?
ஓர் ஏக்கர் பயிர் உற்பத்திக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கடன்கள் வாங்கிச் செலவழித்துப் பயிர் செய்து கண்ட பயன் என்ன? "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பது அன்று முதல் இன்று வரை கொஞ்சமும் மாறவில்லை.
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குகின்றன. விவசாயிகள், தங்கள் நெல்லை விற்க, இந்த நிலையங்களை அணுக வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளம் மூலம் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து, தங்கள் நெல்லை விற்கப் பதிவு செய்யலாம்.
விவசாயிகளின் நலனுக்காக நாடு முழுவதும் பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்துள்ளது. கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
மழை மற்றும் காத்திருப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சில நேரங்களில், விளைநிலங்களுக்கே சென்று நெல்லை வாங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
2025-ஆம் ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் விலை குறித்த தற்போதைய நிலவரம் தமிழக அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369 ஆகும். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து இந்த விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், விளைந்த நெல்லை உடனடியாக அரசு வாங்காததால் மழையில் நனைந்து பாழாவதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்துவதற்காக உயர் அலுவலர்கள் கொண்ட 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், பருத்தியப்பர் கோயில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கையும் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 3.87 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு, நிகழாண்டு 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்தது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.
நிகழாண்டில் அதிகப்படியான நெல்வரத்து காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.34 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 25 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, அவற்றில் 69 ஆயிரத்து 883 டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைவது குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து 5 பொது மேலாளர்கள், 4 மேலாளர்கள் தலைமையில் 9 குழுக்களும், 12 மண்டல மேலாளர்கள் தலைமையில் 12 குழுக்களும் என மொத்தம் 21 குழுக்கள் அமைத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் இயக்கப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2025, செப்டம்பர் 1 முதல் 1,728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அக்டோபர் 8 வரை 7.02 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 97 ஆயிரத்து 125 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.1,606.65 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்குத் தேவையான 2.65 கோடி சரக்குகள் மற்றும் சணல் தயார் நிலையில் உள்ளன என்றார் அமைச்சர் சக்கரபாணி.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் 1,97,500 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1,93,900 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 75,250 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 99,250 ஏக்கரிலும் குறுவை சாகுபடி நடந்து பெரும்பகுதி அறுவடை முடிந்துள்ளது.
அறுவடை இன்னும் 25% நடைபெற வேண்டிய நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்கும் நிலையில் உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் மலைபோல் குவிந்துள்ளன.
இங்கே தேங்கியுள்ள நெல் மூட்டைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் அரசு உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் நடமாடும் கொள்முதல் முறையைச் செயல்படுத்த வேண்டும். ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
"கடந்த காலங்களைவிட 5 மடங்கு கூடுதல் நெல் விளைந்துள்ளது. தற்போது 1,500 நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க சர்க்கரை ஆலைக் கிடங்குகள், சிவில் சப்ளைஸ் கிடங்குகளைப் பயன்படுத்தியுள்ளோம்' என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுசெல்லப்படும் நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது; மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளையும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக் காட்டியும் அவற்றைச் சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பருவ மழைக்கு முன்பாகவே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியும் அவற்றை அரசு செய்ய தாமதப்படுத்தியே வந்துள்ளது. காவிரிப் பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லப்படவில்லை.
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருப்பது குறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பல இடங்களில் மழை பெய்து நெல் மூட்டைகள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதன் காரணமாக விளைச்சல் வீணாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு விவசாயிகள் துயரத்தை அனுபவித்து வந்தபோதிலும், அதைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதே நிலை இன்னும் தொடர்கிறது என்கின்றனர் அவர்கள்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் 6.13 லட்சம் ஏக்கரில் சுமார் 70% அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
காவிரிப் பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், அறுவடை செய்யப்படாத வயல்களில் நெல் மணிகள் உதிர்ந்து முளைத்துவிடும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்து ஒரு வாரத்துக்குள் குறுவை நெல் அறுவடை முற்றிலுமாக முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கூடுதலாக வரும் நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் கிடத்தப்பட்டு மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கியிருப்பதற்காக தமிழக அரசும், அதிகாரிகளும் இல்லாத காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறி வருகின்றனர். இவ்வாறு பொறுப்பை மறுக்காமல் ஏற்றுச் செயல்படுத்துவதே நல்லாட்சிக்கு அடையாளமாகும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.