
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த 1922 ஆம் ஆண்டு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவரால் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் வரும் 2022 ஆம் ஆண்டில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயம். இந்த ஆலயம் கடந்த 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ரூ.13 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவரது தலைமையில் இறை ஒப்படைப்பு செய்யப்பட்டிருக்கிறது. நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் எல்லா மக்களும் அணுகக்கூடிய வடிவமைப்பிலும் இந்த ஆலயமானது அப்போதே கட்டப்பட்டிருக்கிறது.
ஆலயம் தொடங்கிய காலத்திலிருந்தே இயேசுவின் அன்பை சாதி, மத பேதமின்றி அளித்து வரும் இத்தேவாலயமானது வரும் 2022 ஆம் ஆண்டில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காஞ்சி மாநகரில் முதல் முதலாக தொடங்கப்பட்ட ஆலயமும் இதுவாகும்.
இது குறித்து காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தின் குருசேகர ஆயர் அருள்திரு.எஸ்.தேவஇரக்கம் கூறியது:
கடந்த 1839 ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து கிறிஸ்துவ அருட்தொண்டர்கள் கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் வாயிலாக இயேசுவின் அன்பை காஞ்சிபுரத்தில் வசித்து வந்த மக்களுக்கு அளித்து வந்திருக்கிறார்கள். பலருக்கும் கல்வியுரிமை மறுக்கப்பட்ட அப்போதைய சமூகத்தில் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பயன்படும் வகையில் முதன்முதலாக பள்ளி ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். கடந்த 1839 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி அருள்திரு ஜான் அந்திரசன் என்பவரால் பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் மருத்துவர் ஹார்டி என்பவரால் 1907 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் சி.எஸ்.ஐ. மருத்துவமனை ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.
பல ஆண்டுகள் கிறிஸ்துவ அருட்தொண்டர்கள் கல்விச்சேவையையும் மருத்துவச் சேவையையும் எவ்வித பிரதிபலனும் பாராமல் அளித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் மட்டும் கிறிஸ்துவ ஆலயம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.
இதன்பின்னரே கடந்த 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் முதலாக காஞ்சிபுரத்தில் கிறிஸ்துவ ஆலயம் நிறுவப்பட்டு இறை ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிக்கு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவர் தலைமை வகித்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக அன்று முதல் இன்று வரை சாதிய ஒழிப்பு விழிப்புணர்வு, தீண்டாமை காரணமாக மறுக்கப்பட்ட மக்களுக்காக குளம் அமைத்தல், ஆண், பெண் இருபாலரும் கல்வி பயிலும் வகையில் கல்வி நிலையங்கள் உருவாக்குதல், பெண்கள் பயிற்சிப் பட்டறை, இருபாலருக்கும் தங்கும் விடுதிகள் என்று ஏராளமான சமூக மேம்பாட்டில் கிறிஸ்துவ தேவாலயம் சிறந்து விளங்கி சமூக மேம்பாட்டில் முன்னோடியாகவும் இருந்து வருகிறது.
காலரா, அம்மை நோய் தாக்குதல், போலியோ நோய் பரவிய காலங்கள் போன்ற நேரங்களில் எல்லாம் ஆலயமும், மருத்துவமனையும் செய்த சேவைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். இன்றும் இயேசுவின் அன்பை சாதி, மத பேதமின்றி எடுத்துரைக்கிறது. காஞ்சி மாநகரின் வரலாற்றில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயமும் மிக முக்கிய ஆன்மீக திருத்தலமாக திகழ்ந்து வருகிறது எனவும் அருள்திரு எஸ்.தேவ இரக்கம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.