பாளையங்கோட்டையில் ஊசிக்கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றறாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது.
தென்னிந்திய திருச்சபையின் போதகரான ரேனியஸ், பாளையங்கோட்டையில் ஒரு பெரிய தேவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்தார். 1826 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாள் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்திற்கு கால்கோள் நாட்டு விழா நடைபெற்றது. அதே ஆண்டில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி 6 மாதங்களுக்குள் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த தேவாலயத்திற்கு பெரிய கோயில், புதுக்கோயில், வேதக்கோயில், ரேனியஸ் கட்டிய கோயில், ரோட்டுக்கோயில் என்று மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழைத்து இயேசுவை வணங்கிச் சென்றனர். 1835 ஆம் ஆண்டில் ரேனியஸ் நெல்லையை விடைபெற்றதும், சென்னை முதல் பேராயர் காரி, 1836 ஆம் ஆண்டில் முதல் முறையாக திருநெல்வேலிக்கு வந்தார். அப்போது பாளை. பெரியகோயிலில் தேவசகாயம் என்பவருக்கு குருத்துவ பட்ட ஆராதனையின்போது, இவ்வாலயத்துக்கு பரிசுத்த திரித்துவ ஆலயம் என்று பெயர் சூட்டினார்.
114 ஆண்டுகளுக்குப் பிறகு 1940 ஆம் ஆண்டில் அந்நாளைய நெல்லை பேராயர் ஸ்தேவான் நீல் காலத்தில் அத்தியட்சாலயம் என்ற பெயரும் பெற்றது. எத்தனை பெயர்கள் இருந்தாலும் மக்கள் ஊசிக்கோபுரம் என்று அழைப்பதில்தான் பெருமை கொள்கின்றனர்.
இந்த ஊசிக்கோபுரம் கட்டும் பணிகள் 1845 ஆம் ஆண்டு தொடங்கியது. கோபுரத்திற்கு உறுதியான அடித்தளம் அமைய கோட்டைச் சுவர்களில் உள்ள கற்களை அதிகாரிகளின் அனுமதியோடு பெற்று பயன்படுத்தினார்கள். கோபுரத்தை மூன்று தளங்கள் உடையதாகவும், உச்சிப்பகுதி ஊசி போன்ற அமைப்புடையதாகவும் அமைத்தனர். கோபுரத்தின் உச்சியில் 6 அடி சுற்றறளவு உள்ள இரும்பு உருண்டை பதிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் 11-4-1845 ஆம் தேதி நிறைவடைந்தது.
இறைவழிபாட்டிற்கு மக்களை அழைக்க மணி அடிக்கும் பழக்கம் அன்று இல்லை. பனந்தூறு ஒன்று துழைக்கப்பட்டு, அதன் மேல்பகுதி ஆட்டுத்தோலால் போர்த்தி, அதை தட்டுவதன் மூலம் ஓசை எழுப்புகிற முறையே அன்று கையாளப்பட்டது. அதன்பின்பு, இங்கிலாந்தில் இருந்து ஆலய மணியும், கடிகாரமும் வரவழைக்கப்பட்டு 1850 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கோபுரத்தில் பொருத்தப்பட்டன. அன்று முதல் கடிகாரம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்பின்பு திருச்சபை மக்கள் பெருக பெருக ஆலயத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றளவும் மக்களின் பிரார்த்தனைக்குரிய முக்கிய இடங்களில் ஒன்றாகவும், பாளையங்கோட்டையின் அடையாளங்களில் ஒன்றாகவும் ஊசிக் கோபுரம் தேவாலயம் திகழ்ந்து வருகிறது.
இதையும் படிக்க | பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.