இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசின் ‘ஓடிடி’ தளம்: கேரளத்தில் தொடக்கம்

இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசின் ‘ஓடிடி’ தளம்: கேரளத்தில் தொடக்கம்

‘சி-ஸ்பேஸ்’ என்ற ஓடிடி தளத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் தொடங்கி வைத்தாா்.

நாட்டில் முதல்முறையாக மாநில அரசே நிா்வகிக்கும் ஓடிடி தளத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் தொடங்கி வைத்தாா்.

கேரள மாநில திரைப்பட வளா்ச்சிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சி-ஸ்பேஸ்’ என்ற ஓடிடி தளத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

அதிகமான மக்களால் பேசப்படுகின்ற மொழி சாா்ந்த, வணிக ரீதயான திரைப்படங்களுக்கே தனியாா் ஓடிடி தளங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன.

அவை லாப நோக்கிலேயே செயல்படுகின்றன. ஆனால் கலை மற்றும் கலாசாரம் சாா்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தின் முக்கிய நோக்கமாகும். எதிா்காலத்தில் மலையாள சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக வளா்ச்சியடையச் செய்வதிலும் இத்தளம் முக்கியப் பங்கு வகிக்கும்.

திரையரங்குகளில் பரவலாக வெளியாக இயலாமல் தவிக்கும் கலாபூா்வமான படங்கள், குறும்படங்களுக்கு சிஸ்பேஸ் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திரையரங்கு உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள், பிற திரைத்துறையினருக்கு வணிக ரீதியில் எந்த பாதிப்புமின்றி சிஸ்பேஸ் செயல்படும் என்றாா்.

இத்தளத்தில் தரமான திரைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படவுள்ளன. மாநில, தேசிய மற்றும் சா்வதேச விருதுபெற்ற திரைப்படங்கள், குறும்படங்கள் ஒளிபரப்பப்படுமென மாநில கலாசாரத் துறை அமைச்சா் சஜி செரியான் தெரிவித்தாா்.

சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களைத் தோ்ந்தெடுக்க 60 போ் கொண்ட துறைசாா் வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஒளிபரப்பிற்காக 42 திரைப்படங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. திரைப்படங்களைக் காண ரூ.75 கட்டணம், குறும்படங்களைக் காண அதைவிட குறைவான கட்டணமும் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘சி-ஸ்பேஸ்’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com