என்னுடைய உணர்வுகள் இப்போது முக்கியமல்ல: கெளதமி அறிக்கைக்கு கமல் பதில்!

கெளதமியும் அவர் மகள் சுப்புவும் நிம்மதியாக இருக்கவேண்டும். அதுவே... 
என்னுடைய உணர்வுகள் இப்போது முக்கியமல்ல: கெளதமி அறிக்கைக்கு கமல் பதில்!
Published on
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசனைப்  பிரிவதாக நடிகை கௌதமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து கமல் பதிலளித்துள்ளார். 

கமலைப் பிரிவது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கெளதமி கூறியதாவது: இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கிறது. ஆம். நானும் கமல்ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. ஏறத்தாழ 13 ஆண்டு இணை வாழ்வுக்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக்கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமசரம் செய்து கொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிதானதல்ல. இதயத்தை நொறுக்கும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்தேன்.

எனது நோக்கம் அனுதாபம் தேடுவதோ குற்றம் சொல்வதோ அல்ல. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த மாதிரியான முடிவெடுப்பது மிக சிரமமானதாகத்தான் இருக்கும் என்றாலும் எனக்கு இந்த முடிவெடுப்பது முக்கியமானதாகவும் உள்ளது. நான் ஒரு தாய் என்பதுதான் எனக்கு முதலாவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. நான், என் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பது என் கடமை. அதற்காக என் மன அமைதி எனக்கு முக்கியம். சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னிருந்தே, நான் கமல்ஹாசனின் ரசிகை என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அவரது திறமைகளையும், சாதனைகளையும் எப்போதும் போலவே வியந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். என் வாழ்வின் இந்த அதிமுக்கியமான நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காரணம், என் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் என்னால் முடிந்தவரை கண்ணியத்தோடு இருந்திருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணத்தின் ஓர் அங்கமாக நீங்களும் பலவிதங்களில் என்னோடு இருந்திருக்கிறீர்கள். கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் நீங்கள் பல வழிகளில் வழங்கியுள்ளீர்கள். வாழ்க்கையின் மிகக் கடினமான, வலி மிகுந்த காலங்களில் எல்லாம் என்னை மேலும் வழிநடத்தும் உங்கள் அன்பிற்கு என்றென்றும் நன்றி என அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில் கெளதமியின் அறிக்கை குறித்து கமல் ஒரு பேட்டியில் கூறியதாவது: 

அவருக்கு எது செளகரியமும் மன அமைதியும் தருகிறதோ அது எனக்கும் சரியே. இந்தக் கணத்திலான என்னுடைய உணர்வுகள் இப்போது முக்கியமல்ல. கெளதமியும் அவர் மகள் சுப்புவும் நிம்மதியாக இருக்கவேண்டும். அதுவே முக்கியம். அவர்களுக்கு என் வாழ்த்துகள். எப்போது உதவி தேவைப்பட்டாலும் அவர்களுக்கு நான் துணை நிற்பேன். ஷ்ருதி, அக்‌ஷரா, சுப்புலட்சுமி என மூன்று மகள்களைக் கொண்டவன் நான். இதனால், உலகிலேயே அதிர்ஷ்டமான தந்தையாக என்னை எண்ணிக்கொள்கிறேன் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com