
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
வேலைக்காரன் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவரவுள்ளது. செப்டம்பர் 29 - ஆயுத பூஜை. அடுத்த செப். 30, அக்டோபர் 1, 2 ஆகிய அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்று அச்சமயத்தில் வேலைக்காரன் படம் வெளிவருகிறது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரெமோவும் ஆயுத பூஜை சமயத்தில் வெளியாகி வசூலை அள்ளியது. அக்டோபர் 7-ம் தேதி வெளியான அந்தப் படம் தொடர்ந்து 6 நாள்கள் சீரான வசூலை அள்ளி மகத்தான சாதனை படைத்தது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. முதல்வார விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்தன. இப்படி, சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் கண்ட படம் ரெமோதான். அதேபோன்றதொரு வசூலை அடைய வேலைக்காரன் படமும் அதே பாணியில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் பார்வை போஸ்டர் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. இதுகுறித்து வேலைக்காரன் படத் தயாரிப்பாளர் கூறியதாவது: சிவகார்த்திகேயன், விஜய் டிவி, 24 ஏஎம் ஸ்டூடியோ என மூன்று தரப்பும் ஒரு குடும்பம்போல. எனவே உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதால் அது படத்தை விளம்பரப்படுத்த மிகவும் உதவும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.