வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்கள் இனி வெளியாகாது!
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது...


திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்தது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில்
திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை.
எனினும் தமிழ்நாட்டில் ஹிந்தி, தெலுங்கு மொழிகளின் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக ஆலோசித்துதான் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தன. ஆனால் தற்போது தமிழ்த் திரையுலகைத் தவிர இதர திரையுலகங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டன.
தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறபோது புதிய தெலுங்குப் படங்கள் இங்கு வெளியாவதால் வேலை நிறுத்தத்தின் தாக்கத்தை அது குறைக்கிறது என்கிற கருத்து நிலவியது. இதுகுறித்து தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்கள் இனி வெளியாகாது என்று தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராம்சரண், சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ரங்கஸ்தலம் உள்ளிட்ட புதிய தெலுங்குப் படங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் தமிழ்நாட்டில் வெளியிடப்படாது என்கிற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...