இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது! இலவச மென்செயலி உருவாக்க உதவினார் ஜி.வி.பிரகாஷ்!

மருத்துவராகி சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று லட்சியத்துடன் படித்த மாணவி அனிதா,
இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது! இலவச மென்செயலி உருவாக்க உதவினார் ஜி.வி.பிரகாஷ்!
Published on
Updated on
1 min read

மருத்துவராகி சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று லட்சியத்துடன் படித்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ கட்-ஆப்பில் 196.5 எடுத்திருந்தார். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த 'நீட்' நுழைவுத் தேர்வில் அவரால் போதிய மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை. அந்த குக்கிராமத்து பெண்ணின் மருத்துவர் கனவு தகர்த்தெறியபட்டதனால் மனம் உடைந்து போன அனிதா கடும் விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ட்விட்டரில் பலர் மாணவி அனிதாவின் மரணம் குறித்து தங்களின் கண்டனங்களையும் கண்ணீரையும் பதிவிட்டிருந்தனர். அச்சமயத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 'இதுவே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்’ என்று கூறியிருந்தார். அனிதாவின் மரணம் தொடர்பாக பல ட்வீட்டுகளை எழுதி வருத்தம் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ், அனிதாவின் வீட்டுக்கே சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். அனிதாவின் சொந்த ஊரான குழுமூருக்குச் சென்று வந்தபின், ஒரு விடியோவும் பேசி வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் ஒரு மொபைல் ஆப் ஒன்றினை உருவாக்கி உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த புதிய மொபைல் செயலியைப் பற்றி தனது ட்விட்டரில் கூறியிருப்பது, 'நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைத்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ்வழி, ஆங்கிலவழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறது. தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த மென்செயலியின் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவினருக்கு வாழ்த்துகள்' என்று பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com