கண்ணழகி பிரியா வாரியாரை பாராட்டும் பாலிவுட் பிரபலம்!

சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டுமே பெரிய தகுதியாகிவிடாது. ஆனால் நடிகைகளைப் பொருத்தவரையில் இளமையும் அழகும் கூடுதல் தகுதிகள்.
கண்ணழகி பிரியா வாரியாரை பாராட்டும் பாலிவுட் பிரபலம்!
Published on
Updated on
2 min read

சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டுமே பெரிய தகுதியாகிவிடாது. ஆனால் நடிகைகளைப் பொருத்தவரையில் இளமையும் அழகும் கூடுதல் தகுதிகள். அவ்வகையில் தற்போது இணையத்தில் மட்டுமல்லாது ரசிகர்களின் இதயத்தையும் கவர்ந்து வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

'ஒரு அதார் லவ்' படத்தில் வரும் 'மாணிக்ய மலராய' பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி கூகுளில் அதிகம் தேடப்படும் பெயராகி விடுவோம் என்று பிரியாவே கூட நினைத்திருக்கவில்லை. பிரியா மற்றும் அவருடன் நடித்த ரோஷன் அப்துல் ரகூஃப் இருவரின் முக பாவங்களும் உடல்மொழியும் அந்தப் பாடலை அனைவரையும் வெகுவாக ரசிக்கச் செய்துவிட்டது. ரோஷன் தன்னுடைய ஒரு புருவத்தை உயர்த்த பிரியாவும் அதே போலச் செய்வார், அதன் பின் ரோஷன் ஸீ ஸா போல இரண்டு புருவங்களையும் மேல் உயர்த்த, அதற்குப் பதிலாக அழகாக கண்ணடித்து பின் வெட்கப் புன்னகையுடன் முகம் திரும்பி மலர்ந்து சிரிப்பார் பிரியா. 

இந்தக் காட்சி சிறப்பாக அமைந்ததற்கு ரோஷனின் பங்களிப்பும் காரணம் என்றார் பிரியா. மேலும் அவர் கூறுகையில், ‘கண்ணடித்துப் புகழ் பெறுவதை விட, ஒரு நல்ல நடிகையாக அறியப்படுவதையே விரும்புகிறேன். ஆனால் இந்தப் பாராட்டுக்களை எல்லாம் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்தப் பாடல் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஒரு முப்பது நொடிக்குள் உங்களால் எந்தளவுக்குச் சிறப்பாக இந்தக் காட்சியில் நடிக்க முடியுமோ அதை செய்யுங்கள் என்று இயக்குநர் எங்களிடம் சொல்லியிருந்தார்.

இந்தக் காட்சி இப்படி பெரிய ஹிட்டாகி இணையதளம் முழுவதும் வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் படம் பள்ளி காலத்தில் ஏற்படும் நட்பு, காதல், பருவ வயதில் ஏற்படும் குழப்பங்கள் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட கதையாகும். பள்ளியில் படிக்கும் காலத்தில் தோன்றும் காதலும் அதைத் தொடர்ந்து ஏற்படும் சில சிக்கல்களும்தான் படத்தின் ஒற்றை வரிக் கதை’ என்று கூறினார் பிரியா. 

சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளினார் பிரியா என்ற செய்தி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. பிரியாவை தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் நான்கு லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அதார் லவ் படத்தைத் தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டும் அவருக்கு ரெட் கார்பெட் அழைப்பு விடுத்துள்ளது. இப்படி சமூக வலைத்தளங்களில் எல்லா மொழி ரசிகர்களும் தன் பக்கம் ஈர்த்துள்ள பிரியா வாரியரை, அண்மையில் பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் தனது ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.

'பிரியா வாரியார் பெரிய நடிகையாக வருவார் என்று தோன்றுகிறது. அழகான முகபாவங்கள் மட்டுமல்லாமல் அப்பாவித்தனமும் கூட அவரது முகத்தில் இருக்கிறது. மை டியர் பிரியா, நீங்கள் உங்கள் வயது நடிகைக்கு சரியான போட்டியாக மாறப் போகிறீர்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கட்டும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் நடிக்கும் காலகட்டத்தில் நீங்கள் வரவில்லையே ஏன்?’  என்று ட்வீட் செய்துள்ளார் ரிஷி கபூர். ரிஷி கபூர் நேர்ப் பேச்சிலும் சரி, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை சொல்வதிலும் சரி, தான் நினைப்பவற்றை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா வாரியருக்குப் பிடித்த பாலிவுட் நடிகர்கள் யார் என்று கேட்டபோது ரன்வீர் சிங், ஷாருக் கான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா என்று கூறியிருக்கிறார். இன்னும் பல கேள்விகள் பிரியாவிடம் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும். அவரும் சலிக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி நிச்சயம் மலையாளப் பேரழகி பிரியாவுக்குத் தெரிந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com