பிரியாணியும் மட்டன், சிக்கனும் சாப்பிட்டு எங்களுக்கு விதிமுறைகள் வகுக்கிறீர்களா?: பீட்டா அமைப்பின் மீது இயக்குநர் பாண்டிராஜ் காட்டம்! ஆவேசம்!

பீட்டாவைச் சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக...
பிரியாணியும் மட்டன், சிக்கனும் சாப்பிட்டு எங்களுக்கு விதிமுறைகள் வகுக்கிறீர்களா?: பீட்டா அமைப்பின் மீது இயக்குநர் பாண்டிராஜ் காட்டம்! ஆவேசம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா. இதற்கான காசோலையை நெல் ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகள் பெற்றுக்கொண்டார்கள். சூர்யாவின் அகரம் அமைப்பின் மேற்பார்வையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசியதாவது:

இயக்குநர் பாண்டிராஜைத் தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாகக் கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்தே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம், சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றைச் சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. 

இங்கே நமது தமிழ்நாட்டில் நிறைய மருத்துவர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியைக் கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால்தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும், ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்குக் கருத்து சொல்லும் பொழுதுபோக்குப் படங்களைத்தான் எடுப்போம் என்றார்.

இந்த விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது:

படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்குச் சரியாக இருப்பாரா என்கிற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியைக் கிளப்பியுள்ளார்கள். அது சுத்தப் பொய். 

படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்துக் கொண்டாடுகிறார்கள். அதைப் படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவைச் சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன்தான். எங்களை விட சிறப்பாக ஆடு, மாடுகளை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி, கூட்டிச் செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது. அப்படி உங்களுக்கு என்ன அக்கறை எங்களுக்கு இல்லாதது ? எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் யாரும் கவலைப்ப வேண்டாம். ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றால் கூட நாங்கள் மாடு சாப்பிடாமல் இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம். பிரியாணியும் மட்டன், சிக்கனும் சாப்பிட்டு எங்களுக்கு விதிமுறைகள் வகுக்கிறீர்களா என்று உணர்ச்சிவயமாகப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com