புத்தகம் படிக்கும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையவே கிடையாது! இப்படிச் சொன்ன இயக்குநர் யார்?

டோலிவுட், கோலிவுட் ,பாலிவுட் என பல மொழிகளில் நடிப்பதுடன் திரைப்படங்களையும் வெற்றிகரமாக இயக்கிவருகிறார்
புத்தகம் படிக்கும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையவே கிடையாது! இப்படிச் சொன்ன இயக்குநர் யார்?

டோலிவுட், கோலிவுட் ,பாலிவுட் என பல மொழிகளில் நடிப்பதுடன் திரைப்படங்களையும் வெற்றிகரமாக இயக்கிவருகிறார் பிரபு தேவா. டான்ஸராக தொடங்கிய இவரது க்ராஃப், கடும் உழைப்பாலும் தன்முனைப்பாலும் டான்ஸ் மாஸ்டராகி, பின் நடிகராக அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமரிசனங்களுக்குள்ளானார். ஆனால் அவற்றிலிருந்து மீண்டு, தனது பாதையை தெளிவாக வகுத்துக் கொண்டார்.

நடிகைகளை வரவேற்கும் அளவுக்கு நடிகர்களை வரவேற்காதது பாலிவுட். இதற்கு கமல், ரஜினி கூட விதிவிலக்கல்ல. ஆனால் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பாலிவுட்டில் சூப்பர் இயக்குநராக வலம் வருகிறார் பிரபு தேவா. அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானது. சமீபத்தில் நாளிதழுக்கு பேட்டியளித்த பிரபு தேவா மனம் திறந்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து ஒரு துளி:

சினிமாவில் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் பழக்கம் உண்டா? அப்படி திரும்பிப் பார்க்கும் போது எப்படி உணர்வீர்கள்?

‘உண்மையைச் சொல்லணும்னா எனக்கு அப்படி ஒண்ணும் தோணவே இல்லை. உங்க லைஃப் பத்தி உங்களுக்கு என்ன ஃபீல் இருக்கோ அப்படித்தான் எனக்கும் இருக்கும். நான் என்னை ராக்கெட் அனுப்புற பெரிய சயிண்ட்டிஸ்ட்டா நினைச்சுக்கலை. கடவுள் கொடுத்தது என்னுடைய ஸ்டேஜில் நீங்க இருந்தாலும் இப்படித்தான் இருப்பீங்க. முக்கியமா, நான் என்னுடைய ஃபீல்ட்ல சாதனை பண்ணிட்டதாக நினைக்கலை. சாதனை மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை. உண்மையான சாதனைன்னா பெத்தவங்களோட இருக்கறதும், குடும்பத்தோட வாழறதும்தான். அதை மட்டும்தான் சாதனையாக நினைக்கறேன்.’

ஒரு இயக்குநராக உங்களை எப்படி அப்டேட் செய்துகறீங்க? புக்ஸ் படிக்கற பழக்கம் இருக்கா? உலக சினிமா பார்ப்பீங்களா?

‘அப்டேன் பண்ணிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லைல். சினிமா பார்க்கிறது என்பது கூட ஒரு ரசிகனாகத்தானே தவிர என்னை அப்டேட் பண்ணிக்கறதுக்காக இல்லை. நான் எப்படி கொரியோகிராஃப் பண்றேன்? அதே டெக்னிக்கில்தான் டைரக்ட்டும் பண்றேன். ஆர்வம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. மத்தபடி புத்தகம் படிக்கற பழக்கம் எல்லாம் எனக்கு சுத்தமா கிடையாது. 

ரெண்டு மூணு பக்கம் படிக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்துடும். தூக்கத்தை கட்டுப்படுத்தி இன்னும் நாலு பக்கம் படிக்கறப்ப முதல் பக்கத்துல படிச்சது மறந்து போயிடும். இப்படி இருக்கற எனக்கு எப்படி புக்ஸ் மேல ஆர்வம் வரும்? ஆனால் புத்தகம் படிக்கறவங்களைப் பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கும்.  சில சமயம் பொறாமையாக் கூட இருக்கும். எப்படி அவங்களால படிக்க முடியுதுன்னு வியந்து போவேன். சிலர் இரவு முழுக்க புத்தகம் படிப்பாங்களாம். இதைக் கேட்கவே எனக்கு அதிசயமா இருக்கும். புத்தகம் படிக்கிறதுங்கறது பெரிய கலை. அது என்னால முடியலைங்கறதுதான் நிஜம்.

‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை மூணு தடவை வாங்கியிருக்கேன். மூணு தடவையும் முழுசாப் படிக்க முடியலை. ஒருதடவை மட்டும் 80 பேஜ் படிச்சேன். 83-வது பக்கத்துல ஒரு கேரக்டர் பெயர் வந்தது. அது யார் என்று நியாபகம் இல்லை. அதை தெரிஞ்சுக்க திரும்பவும் முதல் பக்கத்தைப் படிக்கத் தொடங்கினேன். அப்பறம் அப்படியே வைச்சிட்டேன். என் வாழ்க்கையில் நான் முழுதாகப் படித்த ஒரே புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு. இரண்டரை வருஷமாக கொஞ்சம் கொஞ்சமா படிச்சு முடிச்சேன். எங்கே போனாலும் எடுத்துட்டுப் போவேன். ரூமுக்கு வந்தவுடன் பெட் பக்கத்தில் வைத்துக் கொள்வேன். பாக்கறவங்க எல்லாம் நான் ரொம்ப படிப்பாளின்னு நினைச்சுக்குவாங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com